Tamil Nadu Night Curfew: தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. 10 மணிக்கு தொடங்கிய ஊரடங்கு அதிகாலை 4 மணியுடன் நிறைவடைந்தது.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, தமிழ்நாடு முழுவதும் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இதனால், இந்த மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு ஒரு லட்சத்திற்கும் மேல் பதிவாகி வருவது அச்சத்தை ஏற்படுத்துகிறது.
தமிழ்நாட்டிலும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்ததை அடுத்து, ஏப்ரல் 20ஆம் முதல் தமிழ்நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி, தமிழ்நாட்டில் நேற்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இரவு நேர ஊரடங்கின்போது, தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள இயங்காது. வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகள் பகல் நேரத்தில் மட்டுமே இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆட்டோ, டாக்சிக்கு அனுமதி இல்லை. மருத்துவம் போன்ற அவசர தேவைக்கு மட்டும் வாடகை ஆட்டோ, டாக்சி போன்றவை அனுமதிக்கப்படும். பெட்ரோல் நிலையங்கள் தொடர்ந்து செயல்படும். ஊடகம் பத்திரிகை துறையினர் தொடர்ந்து இரவிலும் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் அமலுக்கு வந்த இரவு நேர ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மாநிலம் முழுவதும் இரவு 10 மணிக்குள் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இரவு நேர ஊரடங்கை மீறி வாகனங்களில் சென்றவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். மேலும், ஊரடங்கின் முதல்நாள் என்பதால் சில இடங்களில் போலீசார் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை மட்டும் விடுத்து அனுப்பி வைத்தனர். இரவு நேர ஊரடங்கையொட்டி, தமிழ்நாடு முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தமிழக எல்லைக்குள் நுழைய முயன்ற வாகனங்களை திருப்பி அனுப்பினர்.
இந்நிலையில், இரவு 10 மணிக்கு தொடங்கிய ஊரடங்கு அதிகாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. இதையடுத்து, பொதுமக்கள் தங்களின் தினசரி அன்றாட பணிகளை தொடங்கினர். அதிகாலை 4 மணி முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கியது. பால், பேப்பர், காய்கறி வினியோகம் போன்ற அன்றாடப் பணிகள் தொடங்கப்பட்டன. இன்று இரவு 10 மணி முதல் இரவு நேர ஊரடங்கு மீண்டும் அமலுக்கு வரும். ஊரடங்கின் முதல்நாள் என்பதால் போலீஸார் நேற்று அறிவுறுத்தல் மட்டும் செய்த நிலையில், இன்று கடும் எச்சரிக்கையுடன் இருப்பார்கள். இதனால், அனைவரும் ஊரடங்கு தொடங்குவதற்கு முன்னரே வீட்டுக்கு செல்வது நல்லது.