Tamil Nadu Lockdown News : பள்ளிகள், தியேட்டர்கள் திறப்பு.. தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு!
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் முன்னெச்சரிக்கையாக மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் இரண்டாம் அலை காரணமாக கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் இரண்டு வாரத்திற்கு நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு இதுதொடர்பாக பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது,
“ இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் அடிப்படையில் நடைமுறையில் உள்ள கொரோனா பரவல் தடுப்பிற்கான கட்டுப்பாடுகள் 6.9.2021 காலை 6 மணி வரை மேலும் இரண்டு வாரத்திற்கு நீட்டிக்கப்படுகிறது. இன்று நடைபெற்ற கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு
1.9.2021 முதல் பள்ளிகளில் 9, 10 , 11 மற்றும் 12ம் வகுப்புகள் சுழற்சி முறையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படும். இப்பள்ளிகளில் மதிய உணவுத்திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். மேற்படி, உயர்வகுப்புகள் செயல்படுவதை கவனித்து அதனடிப்படையில், மழலையர் வகுப்புகள், 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை திறப்பது குறித்து 15.9.2021க்கு பிறகு ஆலோசித்து அறிவிக்கப்படும்.
அனைத்து கல்லூரிகளும் செப்டம்பர் 1-ந் தேதி முதல் சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும். இதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்புடைய துறையில் செயலாளர்கள் வழங்குவார்கள். கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
திரையரங்குகள் திறப்பு
அனைத்து பட்டய படிப்பு வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும். ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, 50 சதவீதம் பார்வையாளர்களுடன் 23-ந் தேதி (நாளை மறுநாள்) வரை இயங்க அனுமதிக்கப்படும். திரையரங்க பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டிருப்பதை அரங்க உரிமையாளர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
கடற்கரைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். இப்பகுதிகளில் அமைந்துள்ள கடைகளின் பணியாளர்கள் மற்றும் சிறுவியாபாரிகள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திட மாநகராட்சி/ மாவட்ட ஆட்சியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் ஆகியவை நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.
கடைகள் 10 மணி வரை அனுமதி
இதுவரை 9 மணி வரை அனுமதிக்கப்பட்ட அனைத்து கடைகள் மற்றும் செயல்பாடுகளும் 23-ந் தேதி முதல் 10 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். தகவல் தொழில்நுட்பம்/ தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
அங்கன்வாடி மையங்கள் 1-ந் தேதி முதல் மதிய உணவு வழங்குவதற்காக செயல்பட அனுமதிக்கப்படும். அங்கன்வாடி ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தியருப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். ஆந்திரம், கர்நாடகம் மாநிலங்களுக்கு பொது பேருந்து போக்குவரத்து சேவை இயக்க அனுமதிக்கப்படும்.
தடுப்பூசி
வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மழலையர் காப்பகங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். மழலையரகள் காப்பகங்களின் பொறுப்பாளர்கள், பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். நீச்சல் குளங்கள் விளையாட்டு பயிற்சிகளுக்காக மட்டும் 50 சதவீதம் பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். பயிற்சியாளர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் பணியாளர்களும், தடுப்பூசி செலுத்தியிருப்பதை தொடர்புடைய நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். அனைத்து மக்களின் வாழ்வாதாரம், மாணவர்களின் கல்வி, எதிர்காலம் ஆகியவை பாதிக்கப்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள முடிவுகளை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.