Tamil Nadu Corona Second Wave : அதிக இறப்பு எண்ணிக்கை பதிவு செய்யும் 4வது நகரம் சென்னை!
அதிகபட்சமாக சென்னையில் 7826 பேர் கொரோனாவுக்கு இதுவரை பலியாகியுள்ளனர். நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா இறப்பை பதிவு செய்துவரும் நான்காவது பெருநகரங்களில் ஒன்றாக சென்னை உள்ளது.
கடந்த 20 நாட்களாக 400க்கும் மேற்பட்ட தினசரி கொரோனா இறப்பு எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 267 பேர் என்ற குறைந்த அளவிலான கொரோனா இறப்பை தமிழ்நாடு பதிவு செய்துள்ளது.
மாநிலத்தில் கொரோனா இறப்பு விகிதம் இன்று 1.3% சதவிகிதமாக உள்ளது. 10 லட்சம் மக்கள் தொகையில் அதிகமான இறப்புகளை காணும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு தொடர்ந்து உள்ளது. சராசரியாக,10 லட்சம் மக்கள் தொகையில் 5.1 சதவீதம் பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகின்றனர். மகாராஷ்டிரா, கோவா, புதுச்சேரி போன்ற மாநிலங்கள் (10 லட்சம் மக்கள்தொகையில்) தமிழ்நாட்டை விட கூடுதலான இறப்பு எண்ணிக்கையை பதிவு செய்துள்ளன.
தமிழ்நாட்டில் இதுநாள் வரை, 29,547 பேர் கொரோனா தொடர்பான பாதிப்புகளால் உயிரிழந்துள்ளனர். மகாராராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக, நாட்டின் அதிகப்படியான இறப்பு எண்ணிக்கையை பதிவு செய்த மூன்றவாது மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
மாநிலத்தில், அதிகபட்சமாக சென்னையில் 7826 பேர் கொரோனாவுக்கு இதுவரை பலியாகியுள்ளனர். நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா இறப்பை பதிவு செய்துவரும் நான்காவது பெருநகரங்களில் ஒன்றாக சென்னை உள்ளது. மும்பை, புனே டெல்லி, பெங்களூர் போன்ற நாட்டின் மற்ற பெருநகரங்களின் இறப்பு எண்ணிக்கை சென்னையை விட கூடுதலாகும்.
கொரோனா இரண்டாவது அலையில், அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கின. கிட்டத்தட்ட 7 மாவட்டங்களில் 1,000-க்கும் அதிகமான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. மூன்றில் ஒரு பகுதி கொரோனா இறப்பு சென்னை, செங்கல்பட்டு ஆகிய இரண்டு மாவட்டங்களில் பதிவாகியுள்ளது. அரியலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி,நீலகிரி, பெரம்பலூர், சிவகங்கை போன்ற மாவட்டங்களில் 200-க்கும் குறைவான உயிரிழப்புகளே நிகழ்ந்துள்ளன.
தொற்று பாதிப்பு விகிதம்:
தமிழ்நாட்டில், சுமார் 1 மாதத்துக்குப் பிறகு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்திற்கும் குறைவாக பதிவாகி தொடர்ந்து சரிந்து வருகிறது. ஜூன் 13ம் தேதி நிலவரப்படி, 149927 பேர் தற்போது கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த மே 11ம் தேதி இந்த எண்ணிக்கை 1,60,000க்கும் அதிகமாக இருந்தது.
மேலும், மாநிலத்தின் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படும் விகிதம் 10 சதவீதத்துக்கும் குறைவாக வந்துள்ளது. கடந்த மே மாதம் மூன்றாவது வாரத்தில், மாநிலத்தின் இந்த பாதிப்பு விகிதம் 21%க்கும் அதிகமாக இருந்தது. கடந்த 3 வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான ஊரடங்கு காரணமாக தற்போது இந்த விகிதம் 8% சதவிகிதமாக சரிந்துள்ளது. அதாவது, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 100 நபர்களில், குறைந்தது 8 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது.
தமிழகத்தில் உறுதிபடுத்தப்பட்டவர்களின் விகிதம் குறைந்திருப்பதன் மூலம், தளர்வுகளற்ற ஊரடங்கு காரணமாக தமிழ்நாட்டில் சமூக அளவிலான கொரோனா வைரஸின் பாதிப்பு குறைந்துள்ளதை இதன்மூலம் புரிந்து கொள்ளலாம். மேலும், இந்த தொற்று உறுதிப்படுத்தப்படும் விகிதத்தை 5 சதவிகிதத்துக்கும் குறைந்து இருப்பதை மாநில அரசு முயற்சிக்க வேண்டும்.