"மோடி மீது அமித்ஷாவுக்கு கோபம்; அமைச்சரின் அறிவிப்பு மகிழ்ச்சியே... ஆனால்.." - ட்விஸ்ட் வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்..!
தமிழ்நாடு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழர் ஒருவரை பிரதமராக்குவோம் என கூறியிருக்கிறாரே என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
காவிரி டெல்டா பாசனத்தின் ஜீவநாடியாக திகழும் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு இன்று முதல் தண்ணீர் திறக்கபட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்தார்.
"உழவர் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்"
இதை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "தமிழ்நாட்டின் வேளாண் உற்பத்தியை உயர்த்துவதற்காகவும் உழவர் வாழ்வை மேம்படுத்துவதற்காகவும் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அதற்கான முன்னெடுப்புகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். கடந்த 2 ஆண்டுகளாக, விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்து உழவர் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை அறிமுகம் செய்தோம். அதன் மூலம் இரண்டு ஆண்டுகளாக இதுவரை 23.54 லட்சம் உழவர்கள் பயன் அடைந்துள்ளனர். இதுவரை இல்லாத ஒரு சாதனையாக மிக குறுகிய காலத்தில் 1.5 லட்சம் இலவச வேளாண் மின் இணைப்புகள் புதிதாக வழங்கப்பட்டிருக்கிறது.
"தமிழரை பிரதமராக்குவோம் என்ற அமித் ஷாவின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது"
இப்படி எண்ணற்ற திட்டங்களை வேளாண் துறையில் நிறைவேற்றி வருகிறோம். அதேபோல, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக குறிப்பிட்ட நாளான ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வந்திருக்கிறோம். குறிப்பிட்ட நாளில் திறந்து வைத்தால் மட்டும் போதாது அது கடைமடை வரை சென்றடைய வேண்டும். அதற்கு திட்டமிட்டோம்.
அதற்காக, கடந்த 2021ஆம் ஆண்டில் 62 கோடி 91 லட்சம் ரூபாய் மதிப்பில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. காவிரி நதிநீரை திறம்பட பயன்படுத்தி குறுவை நெல் சாகுபடியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக திமுக அரசு குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தை செயல்படுத்தியது" என்றார்.
தமிழ்நாடு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழர் ஒருவரை பிரதமராக்குவோம் என கூறியிருக்கிறாரே என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "தமிழரை பிரதமராக்குவோம் என்ற அமித் ஷாவின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், அதன் உள்நோக்கம் புரியவில்லை. அதேபோல, மோடி மீது என்ன கோபம் என தெரியவில்லை.
செய்த சாதனைகளைக் கேட்டால் அனைத்து மாநிலங்களுக்கும் ஒதுக்கப்படும் நிதியை சொல்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு என எந்த ஒரு புதிய திட்டமும் பிஜேபி ஆட்சியில் கொண்டுவரப்படவில்லை. திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஏராளமான திட்டங்களை நான் கொண்டு வந்துள்ளேன் அதை பட்டியல் இட்டு உள்ளேன்.
இதற்கு பதில் சொல்ல அவர்கள் தயாராக இல்லை. அதிக ஜிஎஸ்டி நிதி தமிழ்நாட்டில் இருந்து கிடைத்தாலும், மற்ற மாநிலங்களை விட குறைவான நிதியே தமிழ்நாட்டுக்கு ஒதுக்குகின்றார்கள். மதுரை எய்ம்ஸ் அமைப்பதாக சொல்லி இதுவரை எந்த பணியும் நடக்கவில்லை. இதற்கு அமித்ஷா என்ன பதில் சொல்லப் போகிறார்” என்றார்.
தமிழர் பிரதமர் ஆவதை திமுக தடுத்தி நிறுத்தியதாக அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார் என ஸ்டாலினிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "தமிழர் பிரதமர் ஆவதை திமுக தடுத்ததாக வெளிப்படையாக சொன்னால் விளக்கம் தரப்படும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கப்படுவதாக கூறுவது பொய் பரப்புரை. 9 ஆண்டுகால பாஜக சாதனை குறித்த தனது கேள்விக்கு அமித் ஷா பதில் அளிக்கவில்லை" என்றார்.