விருதுநகர் மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த முதல்வர் போட்ட ஆர்டர்!
காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தினை ரூ.75.85 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
வைகை ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தினை ரூ.75.85 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்கள்.
காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு கூட்டுக் குடிநீர் திட்டம்:
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு அரசு, வைகை ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கு ரூ.80.00 கோடி மதிப்பீட்டில் 29,000 மக்கள் பயனடையும் வகையில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தது.
இதையும் படிக்க: Kohli RCB IPL: போட்றா வெடிய..! கோலி ரசிகர்கள் கொண்டாட்டம், மீண்டும் பெங்களூர் அணி கேப்டனாகவுள்ளதாக தகவல்
இத்திட்டத்திற்கு தேவையான நீர், வைகை ஆற்றில் மேலக்கால் அருகில் கொடிமங்களம் தடுப்பணை மேல்புரத்தில் அமைக்கப்படும் 11 நீர் உறிஞ்சு கிணறுகள் மூலம் பெறப்பட்டு காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கு குடிநீர் வழங்கப்படும். இத்திட்டம் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இந்த திட்டத்தின் மூலம், சுமார் 36,000 மக்கள் பயன்பெறுவர்.
தமிழக முதல்வர் போட்ட ஆர்டர்:
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், இந்தத் திட்டத்தினை ரூ.75.85 கோடி மதிப்பீட்டில் மாநில நகர்ப்புர உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (SUIDF), கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டு திட்டம் (KNMT) மற்றும் மூலதன மானிய நிதி (CGF), ஆகிய நிதியாதாரங்களின் கீழ் செயல்படுத்த நிர்வாக ஒப்புதல் வழங்கி ஆணையிட்டுள்ளார்கள்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டம். காரியாபட்டி பேரூராட்சி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சி ஆகியவற்றின் குடிநீர் தேவையை மேலும் திறம்பட எதிர்கொள்ளும் வகையில் அமைகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம், தீவிரமான வானிலைக்கு வழிவகுக்கிறது. ஏற்கனவே, வரட்சியான மாவட்டமாக கருதப்படும் விருதுநகர், காலநிலை மாற்றத்தால் மேலும் பாதிப்படையலாம் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இப்படியான சூழலில், இந்த மாதிரியான கூட்டுக் குடிநீர் திட்டம், அந்த மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என கருதப்படுகிறது.
இதையும் படிக்க: TN Rain Alert: தமிழ்நாட்டிற்கு நாளை தீபாவளி இருக்கா? குறிவைத்து அடிக்கும் கனமழை - சென்னை வானிலை மையம் சொல்வது என்ன?