TN School Leave: மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், அவர்களுக்கான அரையாண்டு விடுமுறையை அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித் துறை. அது எத்தனை நாட்கள் தெரியுமா.?

தமிழ்நாட்டில், பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அரையாண்டுத் தேர்வுகள் மொத்தமாக டிசம்பர் 23-ம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறையை அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை. அது எத்தனை நாட்கள் என்பதை பார்க்கலாம்.
பள்ளிகளில் நடைபெற்றுவரும் அரையாண்டுத் தேர்வுகள்
தமிழ்நாட்டில், 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, கடந்த 10-ம் தேதி அரையாண்டுத் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இன்று முதல் அரையாண்டுத் தேர்வுகள் தொடங்ளியுள்ளன. 6 முதல் 12-ம் வகுப்வு வரையில், அனைத்து வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வுகளும் டிசம்பர் 23-ம் தேதியுடன் முடிவடைகின்றன.
தற்போது, மாணவர்கள் அனைவருக்கும் காலை 9.45 மணி முதல் மதியம் 1 மணி வரை அரையாண்டுத் தேர்வு நடைபெறுகிறது. முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளை வாசித்துப் பார்க்கவும், அதற்கு அடுத்த 5 நிமிடங்கள் தேர்வரின் விவரங்களை சரிபார்க்கவும் ஒதுக்கப்பட்டுள்ளது. சரியாக காலை 10 மணிக்குத் தேர்வு தொடங்கி, பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
9 நாட்கள் அரையாண்டு விடுமுறை அறிவிப்பு
அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வரும் 23-ம் தேதி அரையாண்டுத் தேர்வுகள் முடிவடைவதைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை பள்ளிக்கல்வித் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 24-ம் தேதி முதல், 2026 ஜனவரி 1-ம் தேதி வரை, பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அரையாண்டு விடுமுறை முடிந்து, ஜனவரி 2-ம் தேதி வகுப்புகள் மீண்டும் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரையாண்டுத் தேர்வுகள் முடிந்த உடன், கிறிஸ்துமஸ் மற்றும் அதைத் தொடர்ந்து புது வருடப்பிறப்பு வருவதால், மாணவர்களுக்கு இது குஷியான அறிவிப்பாக உள்ளது.





















