Ukraine Zelensky: “நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளிடமிருந்து உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்கள் கிடைத்தால், நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிடத் தயாராக இருப்பதாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

நேட்டோவில் இணைய உக்ரைன் முயன்றதாலேயே, ரஷ்யா அந்நாட்டின் மீது போர் தொடுத்தது. அதனை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் அவர் முன்மொழிந்த அமைதித் திட்டம், ரஷ்யாவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், உக்ரைன் அதை நிராகரித்தது. இந்நிலையில், தற்போது நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயார் என்றும், அதற்கு இந்த உத்தரவாதம் தேவை என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அவர் என்ன கேட்கிறார் தெரியுமா.?
ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை ஏற்காத ஜெலன்ஸ்கி
உக்ரைன் நேட்டோவில்(NATO) இணைய முயன்றதால் தொடங்கியதுதான் ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர். அந்த போர் ஆண்டுக்கணக்கில் நீண்டுகொண்டிருக்கும் நிலையில், அந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எவ்வளவோ முயற்சிகளை எடுத்தும், எந்த பலனும் இல்லாமல் போனது.
அதைத் தொடர்ந்து சமீபத்தில் 28 அம்ச அமைதித் திட்டத்தை ட்ரம்ப் முன்மொழிந்தார். முதலில் அதை ரஷ்யா ஏற்ற நிலையில், அந்த ஒப்பந்தம் ரஷ்யாவிற்கே சாதகமாக இருப்பதாகக் கூறி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதில் மாற்றங்களை கோரினார்.
இதையடுத்து, திருத்தப்பட்ட முன்மொழிவு வழங்கப்பட்டு, பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. திருத்தப்பட்ட அம்சங்களை உக்ரைன் பிரதிநிதிகள் ஏற்றதாகவும், அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தான் முட்டுக்கட்டையாக இருப்பதகாவும், ட்ரம்ப் சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் உத்தரவாதத்தை கேட்கும் ஜெலன்ஸ்கி
இப்படிப்பட்ட சூழலில், ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “ஆரம்பத்தில் இருந்தே, உக்ரைனின் விருப்பம் நேட்டோவில் சேருவதாகத் தான் இருந்தது. அது தான் உண்மையான பாதுகாப்பு உத்தரவாதங்கள். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த சில கூட்டாளிகள், இந்த முடிவை ஏற்கவில்லை. இன்று, உக்ரைனுக்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு உத்தரவாதங்கள், ரஷ்ய படையெடுப்பைத் தடுக்க முடியும்.“ என்று கூறியுள்ளார்.
மேலும், “அமைதியையும், ரஷ்யா மற்றொரு தாக்குதலை நடத்தாது என்ற உறுதியான உத்தரவாதங்களையும் தான் உக்ரைன் விரும்புகிறது. தொடர்ச்சியான தாக்குதல்கள் மூலம், உக்ரைன் நகரங்கள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா வேண்டுமென்றே மோதலை நீடிக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஐரோப்பாவில் ஏற்பட்ட மிக மோசமான போர் இதுதான். ரஷ்யாவிடம் உக்ரைன் எந்த பிராந்தியத்தையும் விட்டுக்கொடுக்காது.“ என்று ஜெலன்ஸ்கி உறுதிபடக் கூறினார்.
ஜெலன்ஸ்கியின் எக்ஸ் தள பதிவு
முன்னதாக, நேற்று இரவு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஜெலன்ஸ்கி, “அமெரிக்க தரப்புடன் ஒரு சந்திப்புக்கு நாங்கள் தயாராகி வருகிறோம். பல முக்கியமான விவரங்கள் உள்ளன. மேலும், ஒவ்வொரு வரைவின் ஒவ்வொரு அம்சத்திலும் நாங்கள் முழுமையாக பணியாற்றி வருகிறோம். முக்கிய விஷயம் என்னவென்றால், கூட்டாளர்களுடன் நாங்கள் உடன்படும் அனைத்து நடவடிக்கைகளும் உத்தரவாதமான பாதுகாப்பை வழங்க நடைமுறையில் செயல்பட வேண்டும். நம்பகமான உத்தரவாதங்கள் மட்டுமே அமைதியை வழங்க முடியும். எங்கள் கூட்டாளிகள் ஆக்கப்பூர்வமாகவும் தொடர்ந்து பணியாற்றுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.“ என்று கூறியுள்ளார்.
We are preparing for a meeting with the American side. There are many important details, and we are working thoroughly on every point of every draft. The key thing is that all the steps we agree on with partners must work in practice to deliver guaranteed security. Only reliable… pic.twitter.com/yQrn6YupGE
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) December 14, 2025
இதன் மூலம், தங்களின் பாதுகாப்பிற்கான உறுதியான உத்தரவாதம் கிடைத்தால், நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட ஜெலன்ஸ்கி தயாராக இருப்பது தெரிகிறது. அவர் விரும்பும் உத்தரவாதம் கிடைக்குமா.? அமெரிக்கா என்ன செய்யப் போகிறது.? பொறுத்திருந்து பார்ப்போம்.





















