55 கோடி ரூபாய் மதிப்பீடு.. புதிய தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தை திறந்து வைத்த முதலமைச்சர்..!
சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 54.61 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு தொழில்நுட்ப (ITNT) மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 54 கோடியே 61 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு தொழில்நுட்ப (ITNT) மையத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
2022-2023ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட அறிக்கையில், "செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence), இயந்திர அறிவு (Machine Learning), நம்பிக்கை இணையம் (Block chain) போன்ற வளர்ந்துவரும் தொழில்களின் முக்கியத்துவத்தை இந்த அரசு நன்கு அறிந்துள்ளது. இதனை ஊக்குவிப்பதற்காக, சென்னையில் தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் (TNT) அரசால் அமைக்கப்படும். மாநிலத்தின் பெரும் தொழில்நுட்ப சவால்களுக்குத் தீர்வு காணவும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை செயல்படுத்துவதற்கான பணிகளை ஒருங்கிணைக்கவும் இந்த மையம் செயல்படும்” என்று அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு தொழில்நுட்ப மையம்:
அதன்படி சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 54 கோடியே 61 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு தொழில்நுட்ப (ITNT) மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இம்மையம், புதுமைகளை (Innovations) ஒரு சேர அமைப்பதற்கேற்ற சூழ்நிலையை உருவாக்க ஒரு ஊக்கியாகச் செயல்பட்டு, உலகளவில் தமிழ்நாட்டை முதல் 10 இடங்களில் நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டது. ஆழ்தொழில்நுட்ப (DeepTech) மற்றும் வளர்ந்துவரும் தொழில்நுட்ப முனைவோர்களை ஊக்குவித்து, பெரு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஒருங்கிணைந்து உயர்தொழில்நுட்ப முன்மாதிரி மற்றும் வடிவமைப்பு வசதிகளை அமைத்து உலகளாவிய இணைப்புகளை இந்த மையம் உருவாக்கும்.
லாபநோக்கமற்ற நிறுவனம்:
இந்தியாவிலேயே முதன்முறையாக நிறுவப்பட்டுள்ள இத்தகைய தொழில்நுட்ப மையம், கல்வி நிறுவனங்கள் ஸ்டார்ட்அப்கள் (start-ups), பெரு நிறுவனங்கள் மற்றும் அரசு ஆகியவற்றுடன் இணைந்து செயல்படும். இம்மையத்தின் தொடக்க விழாவின் ஒரு பகுதியாக. ஸ்டார்ட்அப் (start-up) நிறுவனங்களுடன் இணைந்து வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டச் செலவிற்கு ஒன்றிய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 50% நிதியினை வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு 37% நிதியுதவியும், தொழில் நிறுவனங்கள் மூலம் 13% நிதி உதவியும் பெறப்பட்டுள்ளது. இந்த மையம், தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின்கீழ் ஒரு லாபநோக்கமற்ற நிறுவனமாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை செயலாளர் ஜெ குமரகுருபரன், மின் ஆளுமை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் தலைமை நிர்வாக அலுவலர் பிரவீன் பி. நாயர், தமிழ்நாடு தொழில்நுட்ப மைய (ITNT) தலைமை நிர்வாக அலுவலர் விஜய் ஆனந்த், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.