செயல்படாத தமிழக முதல்வர் ஹெல்ப்லைன் செயலி - மக்கள் அதிருப்தி; கண்டு கொள்ளுமா அரசு....!
பொதுமக்களின் குறைகளை நேரடியாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்ட TN CM Helpline Citizen செயலி மீது பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பொதுமக்களின் குறைகளை நேரடியாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்ட TN CM Helpline Citizen செயலியில் அளிக்கப்படும் புகார்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புகார் மனுக்கள்
பொதுமக்களில் ஒருவருக்கு தமிழக அரசின் குறிப்பிட்ட சேவை கிடைக்கவில்லை என்றால், அதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரியிடம் மனு அளித்து, பிரச்னையை சரி செய்துகொள்ளலாம். அவரும் உங்கள் புகார்மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அவருக்கும் மேல் உள்ள அதிகாரியிடம் புகார் அளிக்கலாம். உதாரணத்திற்கு, வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்து நடவடிக்கை இல்லையெனில், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கலாம்.
புகார் அளிக்க புதிய வழி
அங்கும் முறையான நடவடிக்கை இல்லையெனில், நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளிக்கலாம். இது முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதால் உங்கள் கோரிக்கை தகுதியுடையதாக இருப்பின் நிச்சயம் தீர்வு கிடைக்கும் என்று அரசு சார்பில் உறுதியளிக்கிறது. முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு cmcell.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவே மிக எளிதாக உங்கள் புகாரை அனுப்ப முடியும்.
மொபைல் செயலி
அதுபோலவே https://cmhelpline.tnega.org/portal/ta/home என்ற இணைய முகவரியை பயன்படுத்தி முதல்வரிடம் மக்கள் புகார்கள் அளிக்க முடியும். அல்லது TN CM Helpline Citizen என்ற செயலியை தங்கள் போனில் டவுன் லோட் செய்தும் பயன்படுத்த முடியும். இது உள்ளடக்கிய, ஒருங்கிணைந்த, மற்றும் எளிமையான பொது மக்கள் குறை தீர்க்கும் உதவி மையம் ஆகும். இதில் மக்கள். அரசு சேவைகள், திட்டங்கள், அடிப்படை சேவைகள் குறித்து மனுக்கள் மற்றும் புகார்கள் அளித்து அவைகளை கண்காணிக்கலாம். எதை பற்றி வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம்.
மேலும் சில வழிகள்
உங்கள் குறைகளை helpline, இணையதளம், கைபேசி செயலி, மின்னஞ்சல் மூலமாகவும், முகநூல் போன்ற சமூக ஊடகம் மூலமாகவும், அல்லது தபால் மூலமாகவும் பதிவு செய்யலாம். உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எழுப்பலாம் மற்றும், கருத்துக்களை பதிவு செய்யலாம் மற்றும் முதல்வரின் அறிவிப்புகளை தெரிந்து கொள்ளலாம். இதில் கொடுக்கப்படும் புகார்கள் ஒருமாத காலத்தில் தீர்க்கப்படும், அல்லது அது தொடர்பான தகவல்கள் பகிரப்படும் என கூறப்பட்டுள்ளது.
எப்படி புகார் கொடுப்பது?
இந்த செயலியில் உங்கள் மொபைல் எண் அல்லது ஆதார் எண்ணை உள்ளிடவும். உள்நுழைய OTP ஐ உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள். அதன்பின் உங்கள் குறைகளை உள்ளிடவும். தயவுசெய்து 'மனுவைச் சமர்ப்பிக்கவும்' பொத்தானைக் கிளிக் செய்து, உங்கள் குறைகளை படிவத்தில் உள்ளிடவும். அதன்பின் படிவத்தை சமர்ப்பிக்கவும். நீங்கள் சமர்ப்பித்த குறைகளின் நிலை உங்களுக்குத் தெரிவிக்கப்படும். 'என் மனுக்கள்' தாவலின் கீழ் முதல்வர் உதவி மையத்திலிருந்து உங்கள் குறைகளை கண்காணிக்கப்படும்.
செயலி மீது குற்றச்சாட்டு
இந்நிலையில் TN CM Helpline Citizen செயலி குறித்து சோதனை முயற்சியாக நாம் ஒர் புகாரினை கடந்த செப்டம்பர் 21 -ம் தேதி பதிவு செய்திருந்தோம். அதனை தொடர்ந்து புகார் எண் வழங்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் அந்த புகார் தொடர்பாக எந்த பதிலும் 30 நாட்களை கடந்தும் வரவில்லை. மேலும் கெடு முடிந்தது என்று மட்டும் குறிப்பிட்டிருந்தது. புகார் அளித்து அந்த புகார் தொடர்பாக 30 நாட்கள் கால அவகாசத்தில் புகார் தொடர்பான நடவடிக்கை எடுக்கப்பட்டு அது குறித்த தகவல்களை ஏதும் வழங்காமல், வெறுமனே கெடு முடிந்தது என அந்த செயலில் வந்துள்ளது.
பொதுமக்கள் அதிருப்தி
மேலும் இதுதொடர்பாக 1100 என்ற TN CM Helpline Citizen ஹெல்ப்லைன் எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டபோது அதற்கான விபரத்தினை அவர்கள் முறையாக வழங்காமல் இணைப்பினை துண்டித்து விட்டனர். மக்களுக்கான ஒரு சேவையினை அரசு வழங்குவதாக கூறும் நிலையில் அதன் செயல்பாடுகள் மிகவும் மோசமான நிலையில், பெயரளவில் இருந்து வருகிறது. செயல்படாத ஒரு சேவைக்காக ஏராளமான பணியாளர்களை பணியில் அமர்த்தி மக்களின் வரிப்பணத்தை அரசு விரையும் செய்வதாகவே இது தெரிகிறது. இனி வரும் காலங்களில் ஆவது முதல்வர் அறிவித்துள்ள திட்டங்களும் சேவைகளும் சரியான முறையில் செயல்பட்டு மக்களிடையே சென்று மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும் என்பதே பொதுமக்களை வேண்டுகோளாக இருந்து வருகிறது.