Annamalai: ரஜினிக்கு ஆதரவாக களமிறங்கிய அண்ணாமலை; தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி பரபரப்பு கருத்து!
"கையில் ஒரு கல்லை எடுத்து எறிந்தால் எங்கள் அகராதியில் சமூக விரோதி தான். எனவே, பொது சொத்துகளை சேதாரம் செய்தார்கள் நாங்கள் சமூக விரோதி என்றோம்" என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் 75,000 இளைஞர்களுக்கு பணி நியமனத்தை இன்று வழங்கி உள்ளார். திங்கள்கிழமை அன்று தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் இளைஞர்களுடன் உரையாடினார்.
மேலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் "ரோஜ்கார் மேளா" திட்டத்தை பிரதமர் மோடி வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார். இதற்காக, பல்வேறு மாநிலத்தில் இருந்து மத்திய அமைச்சர்கள் இந்நிகழ்ச்சியில் இணைந்தனர்.
Warm welcome to our Hon FM Smt @nsitharaman avl & Social Justice MoS Thiru @ANarayana_swamy avl to Chennai (Dept of Railways) & Coimbatore (Dept of Posts) to give appointment letters to our youths as promised by our Hon PM Thiru @narendramodi avargal.
— K.Annamalai (@annamalai_k) October 22, 2022
(1/2)
அந்த வகையில், தமிழ்நாட்டில் ஒரு பகுதியாக சென்னை அயனாவரத்தில் உள்ள அம்பேத்கர் அரங்கில் 250 இளைஞர்களுக்கான பணி ஆணையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார். இதில், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
அப்போது, திமுக இளைஞரணி சார்பில் நடத்தப்பட்ட இந்தி எதிர்ப்புக் குறித்து பேசிய அண்ணாமலை, "சென்ற ஆண்டு 10ஆம் வகுப்பில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் 52,000 பேர் தோல்வி அடைந்துள்ளனர். பல தமிழ் வழி பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தாய்மொழியை வளர்க்க திமுக என்ன செய்துள்ளது?" என கேள்வி எழுப்பினார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி எடப்பாடி பழனிசாமி தொலைக்காட்சியில் பார்த்ததாக சொன்னதை மறுத்துள்ள அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை குறித்து பேசிய அவர், "இதில் என்ன தவறு இருக்கிறது. 5 மணி நேரத்திற்கு மேலாக நடந்த சம்பவம் அது. எடப்பாடி சொன்ன ஒரு கருத்தைத் திரித்துச் சொல்வது சரி இல்லை" என்றார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து ரஜினி சொன்ன கருத்துக்கு பதிலளித்த அண்ணாமலை, "கையில் ஒரு கல்லை எடுத்து எறிந்தால், எங்கள் அகராதியில் அவர்கள் சமூக விரோதிதான். பொது சொத்துகளை சேதாரம் செய்தார்கள்; நாங்கள் சமூக விரோதி என்றோம். திருமாவளவன் , சீமான், கனிமொழி, மு.க. ஸ்டாலின் இவர்கள் எல்லாம் கருத்து சொல்லவில்லையா?
ஆனால், காவல் துறை அறிக்கை வந்தால் அது வேறு மாதிரிதான் இருக்கும். ரஜினிகாந்த் கருத்து பற்றி ஆணையம் சொல்லிய கருத்தை பாஜக எதிர்க்கிறது." என்று அண்ணாமலை தெரிவித்தார்.