Tamilnadu automobile: இனி நாங்க தான்..! “இந்தியாவின் EV தலைநகரம் தமிழ்நாடு” ஜுலையில் தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் கார் உற்பத்தி
Tamilnadu automobile: தூத்துக்குடியில் அமைக்கப்பட்டு வரும் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் ஆலையில், வரும் ஜூன் மாதம் உற்பத்தி தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tamilnadu automobile: இந்தியாவின் ஆட்டோமொபைல் மற்றும் மின்சார வாகனங்களின் தலைநகரமாக தமிழ்நாடு திகழ்வதாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ:
நடப்பாண்டிற்கான பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில், ஏராளமான வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களது கார் மாடல்கள், உற்பத்திக்கான மாடல்கள் மற்றும் புதிய கார் கான்செப்ட்களை காட்சிப்படுத்தி வருகின்றனர். கடந்த 17ம் தேதி தொடங்கிய இந்த கண்காட்சி வரும் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை ஏராளமான பொதுமக்கள் மற்றும் ஆட்டோமொபைல் ஆர்வளர்கள் நேரில் கண்டு களித்து வருகின்றனர். அந்த வகையில் தான், தமிழ்நாடு தொழில்வள அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவும் கண்காட்சியை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025ல் நேரத்தை கழித்தேன். அங்கு நான் பார்த்ததைக் கண்டு வியந்தேன். ஆட்டோமொபைல் துறையில் இந்தியா உயர்வாகப் பறப்பதைப் பார்த்து பெருமிதம் அடைந்தேன். இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட, உருவாக்கப்பட்ட மற்றும் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளுடன் பல நிறுவனங்கள் அங்கிருந்தன. இன்னும் உற்சாகமான விஷயம் என்னவென்றால், தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யும் ஏராளமான நிறுவனங்கள் நிகழ்ச்சியில் முக்கியத்துவம் பெற்று இருந்தன.
முக்கியத்துவம் பெற்ற தமிழ்நாடு
ஹுண்டாய், டாடா மோட்டார்ஸ் , அஷோக் லைலேண்ட் , பிஎம்டபள்யு , டிவிஎஸ் மற்றும் வின்ஃபாஸ்ட்ர் போன்ற தமிழ்நாட்டில் உற்பத்தி தளங்கள் கொண்ட பல நிறுவனங்களின் வாகன அணிவகுப்பை பார்வையிட்டதில் மகிழ்ச்சி . தமிழ்நாடு எல்லா இடங்களிலும் இருந்தது - எல்லாவற்றிற்கும் மேலாக நமது மாநிலம் இந்தியாவின் ஆட்டோ மற்றும் மின்சார வாகனங்களின் தலைநகரம் ஆகும். வின்ஃபாஸ்டை தூத்துக்குடிக்கு கொண்டு வருவது முதலமைச்சரின் விரைவான முடிவெடுக்கும் திறமையால் சாத்தியமானது. மேலும் அந்த முதலீட்டை தென் தமிழகத்திற்கு கொண்டு வந்ததில் நான் தனிப்பட்ட முறையில் எப்போதும் பெருமைப்படுவேன். ஆரம்பத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடித்தளத்தில் சந்தேகம் கொண்டவர்கள் இருந்தனர், இப்போது அதன் நிலையை பாருங்கள்.
வின்ஃபாஸ்ட் ஆலையில் உற்பத்தி
வின்ஃபாஸ்ட் உற்பத்தி ஆலை குறுகிய காலத்திலேயே கட்டப்பட்டு விரைவில் திறப்பு விழாவிற்கான பாதையில் உள்ளது. கண்காட்சியில் வெளியிடப்பட்ட அந்நிறுவனத்தின் VF6 மற்றும் VF7, 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் தூத்துக்குடி ஆலையில் உற்பத்தி செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. VF3 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் உள்ளூர்மயமாக்கல் மற்றும் உற்பத்தியை இலக்காகக் கொண்டது. எங்கள் உற்பத்தி நிறுவனங்களின் விநியோகச் சங்கிலியின் பெரும்பகுதி உள்ளூர்மயமாக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளை தமிழ்நாட்டிலேயே செய்யவும் நாங்கள் தொடர்ந்து அவர்களுடன் பணியாற்றி வருகிறோம்” என அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.
வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை:
தூத்துக்குடியில் சுமார் 17 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும், வின்ஃபாஸ்ட் தொழிற்சாலைக்கு கடந்த ஆண்டு பிப்ரவரியில் முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதற்கான பணிகள் விரைவில் முடிந்து செயல்பாட்டுக்கு வரும்போது, சுமார் 3 ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையில் உற்பத்தி செய்யும் கார்களை மேற்கு ஆசியா மற்றும் ஆப்ரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் வின்ஃபாஸ்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.





















