(Source: ECI/ABP News/ABP Majha)
தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்.. நீண்ட வீக் எண்ட்-க்கு தயாராகும் மக்கள்!
பக்ரீத் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தாம்பரம் - நாகர்கோவில் இடையே இன்றும், ஞாயிற்றுக்கிழமையும் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது.
வரும் திங்கள்கிழமை (ஜூன் 17ஆம் தேதி) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. வார இறுதி நாள்களோடு பக்ரீத் விடுமுறை வர உள்ளதால் வெளியூர், சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் தயாராகி வருகின்றனர். இதற்காக, கூடுதல் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யபப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகளை இயக்கும் தமிழக அரசு: தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் திட்டமிட்டுள்ளது.
கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 545 சிறப்பு பேருந்துகளும், நாளை 585 சிறப்பு பேருந்துகளும், ஞாயிற்றுக்கிழமை 140 சிறப்பு பேருந்துகளும் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல, நெரிசலை குறைக்கும் நோக்கில் தாம்பரம் - நாகர்கோவில் இடையே இன்றும், ஞாயிற்றுக்கிழமையும் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்ட ஹேப்பி நியூஸ்: 06053 எண் கொண்ட தாம்பரம் - நாகர்கோவில் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரியல் ஜூன் 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் (வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) இரவு 10.20 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும். அடுத்த நாள் காலை 11 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
06054 எண் கொண்ட நாகர்கோவில் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில், நாகர்கோவிலில் இருந்து ஜூன் 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை & திங்கள்கிழமை) புறப்படும். அடுத்த நாள் காலை 3 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
அதேபோல, திங்கட்கிழமை அன்று பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு 705 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வார இறுதி நாட்களை முன்னிட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு இன்றும், நாளையும் தலா 15 பேருந்துகளும் ஆக 30 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
திங்கள் அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: BREAKING: திருப்பத்தூரில் சிறுத்தை: முதியவர் காயம்? பொதுமக்கள், மாணவர்கள் நிலை என்ன?