Sylendra Babu Retirement: டி.ஜி.பி, கமிஷனர் அளித்த 'ரோப் புல்லிங்' கவுரவம்... ஆனந்த கண்ணீருடன் விடைபெற்ற சைலேந்திர பாபு...!
தமிழ்நாட்டின் டிஜிபியாக பணியாற்றிய சைலேந்திர பாபுவின் பதவிக் காலம் நிறைவடைந்த நிலையில், காவல்துறை சார்பில் அவருக்கு 'ரோப் புல்லிங்’ மரியாதை தரப்பட்டது.

Sylendra Babu retirement : தமிழ்நாட்டின் டிஜிபியாக பணியாற்றிய சைலேந்திர பாபுவின் பதவிக் காலம் நிறைவடைந்த நிலையில், காவல்துறை சார்பில் அவருக்கு 'ரோப் புல்லிங்’ மரியாதை தரப்பட்டது.
ஓய்வு பெற்றார் சைலேந்திர பாபு
தமிழ்நாட்டின் புதிய சட்ட-ஒழுங்கு டிஜிபி ஆக பொறுப்பேற்றார் சங்கர் ஜிவால். தமிழக சட்ட-ஒழுங்கு துறையின் 32வது டிஜிபி ஆக சங்கர் ஜிவால் பொறுப்பேற்றார். பதவியில் இருந்து இன்றுடன் ஓய்வு பெறும் சைலேந்திரபாபு, அதற்கான ஆவணங்களை சங்கர் ஜிவாலிடம் ஒப்படைத்தார். மயிலாப்பூர் அலுவலகத்தில் கையொப்பமிட்டு பொறுபேற்றார் சங்கர் ஜிவாலுக்கு, மூத்த காவல்துறை அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
சென்னை காவல் ஆணையராக பொறுப்பு வகித்து வந்த சங்கர்ஜிவாலே, புதிய டி.ஜி.பி.யாக பொறுப்பேற்றார். அதேபோன்று, சென்னை மாநகர காவல் ஆணையராக சந்தீப்ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
’ரோப் புல்லிங்' மரியாதை
2021ஆம் ஆண்டு சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபுவை தமிழக அரசு நியமித்தது. 2 ஆண்டுகள் டிஜிபியாக பணியாற்றி சைலேந்திர பாபுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், சைலேந்திர பாபுவுக்கு காவல்துறை சார்பில் 'ரோப் புல்லிங்’ மரியாதை செலுத்தப்பட்டு பிரியாவிடை நிகழ்ச்சியும் கொடுக்கப்பட்டது.
அதன்படி, சென்னை கடற்கரை சாலையில் அமைந்துள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தில் டிஜிபி சங்கர் ஜிவால் உட்பட காவல்துறை உயர் அதிகாரிகள் சேர்ந்து சைலேந்திர பாபுவுக்கு ’ரோப் புல்லிங்' மரியாதையை செலுத்தினர். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காரில் சைலேந்திர பாபுவை அமர வைத்து, அந்த காரை வடம்பிடித்து இழுத்து வழியனுப்பி வைத்தனர்.
ரோப் புல்லிங் என்றால் என்ன?
சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவி வகிப்பது பல ஐபிஎஸ் அதிகாரிகள் கனவாக இருக்கும். ஆனால் சிலருக்கு தான் அந்த வாய்ப்பு கிடைக்கிறது. அத்தகைய பதவியில் இருந்து ஓய்வு பெறுபவருக்கு 'ரோப் புல்லிங்' மரியாதை வழங்கப்படுகிறது. ஓய்வு பெற்ற காவல்துறை தலைமை இயக்குநரையும், அவரது மனைவியையும் காரில் அமர வைத்து, அதில் கயிற்றை கட்டி டிஜிபி அலுவலக கட்டிடத்தின் வாசலில் இருந்து வளாகத்தின் பிரதான வாயில் வரை இழுத்து வருவது தான் ’ரோப் புல்லிங்' மரியாதை. ஏ.டி.ஜி.பி மற்றும் ஐ.ஜி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் ’ரோப் புல்லிங்' மரியாதையை செலுத்தி ஓய்வுபெற்ற காவல்துறை தலைமை இயக்குநரை பெருமைப்படுத்துவார்கள்.
உச்சபட்ச மரியாதை:
ஒரு காவல் அதிகாரி பல ஆண்டுகள் அணிந்து பணியாற்றிய காக்கி உடையுடன் அலுவலகம் வரும் கடைசி தருணத்தை அவரது வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில், மகிழ்ச்சியானதாக மாற்றுவதே ’ரோப் புல்லிங்' மரியாதையின் நோக்கம். அந்த தருணத்தை அவர் தனது குடும்பத்துடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அதிகாரியின் மனைவியும் காரில் அமர வைக்கப்படுகிறார். ஆங்கிலேயர் காலம் தொட்டே, அதாவது 18ஆம் நூற்றாண்டில் இருந்தே இந்த மரியாதை வழங்கப்பட்டு வருகிறது.
1874ஆம் ஆண்டு டபிள்யூ. ராபின்சன் என்பவர் சென்னை மாகாண காவல்துறை தலைவராக நியமிக்கப்பட்டார். அந்த பதவிக்கு வந்த முதல் நபர் டபிள்யூ.ராபின்சன் தான். அப்போது அந்த பதவி ஐ.ஜி அந்தஸ்தில் இருந்தது. டபிள்யூ.ராபின்சன் ஓய்வுபெற்ற போது அவருக்கு 'ரோப் புல்லிங்’ மரியாதை வழங்கப்பட்டது.
அன்று முதல் இன்று வரை ஓய்வுபெறும் காவல்துறை தலைவருக்கு 'ரோப் புல்லிங்’ மரியாதை வழங்கப்பட்டு வருகிறது. காவல்துறையின் பல்வேறு பிரிவுகளின் ஏ.டி.ஜி.பி, ஐ.ஜி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் ஓய்வுபெறும் போது, அவர்கள் விரும்பினால் ரோப் புல்லிங் மரியாதை தரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

