Judge Accident: நள்ளிரவில் திடீர் விபத்து.. புதுக்கோட்டை மாவட்ட பெண் நீதிபதி படுகாயம், மருத்துவமனயில் தீவிர சிகிச்சை
திருமயம் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், புதுக்கோட்டை மாவட்ட பெண் நீதிபதி உள்ளிட்ட இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
திருமயம் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், புதுக்கோட்டை மாவட்ட பெண் நீதிபதி உள்ளிட்ட இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
நள்ளிரவில் விபத்து:
புதுக்கோட்டை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக ஜெயக்குமாரி ஜெமிரத்னா பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு தனது காரில் புதுக்கோட்டையில் இருந்து மதுரை நோக்கி திருமயம்-மதுரை பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அந்த காரை, வலையப்பட்டியை சேர்ந்த 35 வயதான வரதராஜன் என்பவர் ஓட்டிச் சென்றார். அப்போது திருமயம் புதிய நீதிமன்றம் பகுதியில் கார் சென்றபோது எதிரே வந்த, மற்றொரு கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. எதிரே வந்த மற்றொரு காரை ஓட்டி வந்த நபர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த வெங்கடேஸ்வரன் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
படுகாயம்:
விபத்தில் பலத்த காயம் அடைந்த நீதிபதி மற்றும் அவரது கார் ஓட்டுனர் ஆகியோரை, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெங்கடேஸ்வரன் லேசான காயமடைந்தார். நீதிபதி மற்றும் ஓட்டுநர் உள்ளிட்ட இருவருக்கும் முகம் உள்ளிட்ட பகுதிகளில் படுகாயம் ஏற்பட, அதிகப்படியான ரத்தம் வழிந்தோடிய நிலையில், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, நீதிபதிக்கு உயர்சிகிச்சை தேவைப்பட்டதால் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நீதிபதி மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேநேரம், கார் ஓட்டுநர் வரதராஜனுக்கு புதுக்கோட்டையிலேயே தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேஷ் (வயது 29) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.