Salem Metro:சேலத்திற்கு இரண்டு வழித்தடங்களில் 40 கி.மீ மெட்ரோ ரயில் இயக்க ஆய்வறிக்கை, அரசிடம் சமர்ப்பிப்பு.
சேலத்தில் இரண்டு வழித்தடங்களில் இயக்குவது குறித்து திட்ட அறிக்கையை மாநில அரசிடமும், மத்திய அரசிடமும் மெட்ரோ ரயில் நிர்வாகம் சமர்ப்பித்துள்ளது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கடந்த 2015 ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டிற்கு வந்தது. நாள்தோறும் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் சென்னை மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். சென்னையைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் இரண்டாம் கட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை கொண்டு வருவதற்கு அரசு திட்டமிட்டு கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் கொண்டு வருவதற்கு கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள சேலம், திருச்சி மற்றும் நெல்லை மாநகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதற்கான பணிகளில் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஈடுபட்டு வந்தது.
இதன்படி, தமிழ்நாட்டில் ஐந்தாவது பெரிய மாநகராட்சியாக சேலம் உள்ளது. சேலம் மாநகரில் இரண்டு வழித்தடங்களில் 40 கிலோமீட்டர் தொலைவிற்கு மெட்ரோ ரயில் சேவையை கொண்டு வருவது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. சேலம் மாநகராட்சி 91.36 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்டுள்ளது. சேலம் மாநகருக்கு தினசரி அருகில் இருக்கும் பிற மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் மாநகராக திகழ்கிறது. இதேபோன்று, சேலம் நகரில் கதர், வெண்பட்டு தொழில், ஜவ்வரிசி உற்பத்தி, வெள்ளி கொலுசு மற்றும் சேலம் இரும்பு ஆலை போன்ற முக்கிய வர்த்தகத்தில் முன்னோடியாக விளங்கி வருகிறது. சேலம் மாநகர் பகுதியில் அமைந்துள்ள மொத்தம் சாலைகள் 1037.17 கிலோமீட்டர் நீளம் மாநகராட்சி பராமரிப்பில் உள்ளது. மற்ற சாலைகள் நெடுஞ்சாலைத்துறையின் கீழ் உள்ளது. எனவே, சேலத்தில் மெட்ரோ ரயில் சேவை இயக்குவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளதா என்று கடந்த சில மாதங்களாக தனியார் நிறுவனம் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் சேலத்தில் இரண்டு வழித்தடங்களில் இயக்குவது குறித்து திட்ட அறிக்கையை மாநில அரசிடமும், மத்திய அரசிடமும் மெட்ரோ ரயில் நிர்வாகம் சமர்ப்பித்துள்ளது.
அதில், சேலம் மாநகராட்சியில் கரபுரநாதர் கோவில் முதல் அம்மாபேட்டை வழியாக அயோத்தியாப்பட்டணம் இரயில் நிலையம் வரை 17.16 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 1-ல் 19 துரித போக்குவரத்திற்கான நிலையங்களும், கருப்பூர் முதல் சேலம் இரயில் நிலையம் சந்திப்பு வழியாக நல்லிகலப்பட்டி வரை 18.03 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 2-ல் 19 துரித போக்குவரத்திற்கான நிலையங்கள் என மொத்தம் வழித்தடங்களில் 35.19 கி.மீ நீளத்திற்கு 38 நிலையங்கள் 2 கண்டறியப்பட்டுள்ளன. தற்போதுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அடுத்த 30 ஆண்டு மக்கள் தொகையை கருத்தில் கொண்டு இந்த பெருந்திரள் துரித கால் போக்குவரத்து உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த விரிவான சாத்தியக்கூறு அறிக்கை மாற்றம் வரலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி கருப்பூர், மாமாங்கம், ஜங்ஷன், நான்கு ரோடு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பழைய பேருந்து நிலையம், குகை, தாசநாயக்கன்பட்டி மற்றும் நாழிக்கல்பட்டி வரை ஒரு வழித்தடமும். உத்தமசோழபுரம், மணியனூர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அம்மாபேட்டை, உடையாபட்டி மற்றும் அயோத்தியாபட்டினம் வரை இரண்டாவது வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் சேவை இயக்குவது குறித்து திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.