கரூர் : "இனி இப்படி செய்தால் சட்டப்படி நடவடிக்கை.." மாணவியை எச்சரித்து அனுப்பிய ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்லூரி மாணவி உட்பட சிலர் பள்ளி மாணவ ,மாணவிகளை தேவையில்லாமல் இங்கு அழைத்து வந்திருப்பதை சுட்டிக்காட்டி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
கரூர் மாவட்டம், குளித்தலை, மருதூர் பேரூராட்சிக்குட்பட்ட விஸ்வநாதபுரம் பகுதியிலிருந்து சாலை வசதி இல்லை எனக் கூறி பள்ளி மாணவ, மாணவிகள் சீருடையுடன் அப்பகுதி பொதுமக்கள் மனு அளிக்க வந்திருந்தனர். மாணவ, மாணவிகள் சீருடையுடன் வந்திருந்ததை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் பார்வைக்கு சென்றதும், மாணவ, மாணவிகளை ஏன் தற்போது உள்ள கொரோனா தொற்று கால கட்டத்தில் அழைத்து வந்தீர்கள் என கேள்வி எழுப்பினார். குறைகளை கேட்டறிந்தார். அப்போது தங்களது பிரச்சனையை தீர்த்து வைப்பதாக வாக்குறுதி அளித்தார்.
கல்லூரி மாணவி நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததால் டென்ஷனான மாவட்ட ஆட்சித்தலைவர் பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி சீருடையில் கொரோனா தொற்று காலகட்டத்தில் இங்கு அவர்களை அழைத்து வந்திருப்பதால் உங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அட்வைஸ் வழங்கினார்.
அதைத் தொடர்ந்து மனு அளிக்க வந்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் அங்கு செய்தியாளர்களை சந்தித்த அப்பகுதி கல்லூரி மாணவி ஆட்சித் தலைவரிடம் மனு அளித்த பிறகு, ”ஆட்சித்தலைவர் விரைந்து எங்கள் பகுதிக்கு சாலை வசதி ஏற்பட்ட ஏற்படுத்தி தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார். என தெரிவித்த நிலையில் வாக்குறுதி நிறைவேறவில்லை என்றால் நாங்கள் பள்ளி, கல்லூரிக்கு செல்ல மாட்டோம்” என்றனர்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்லூரி மாணவி உட்பட சிலர் பள்ளி மாணவ ,மாணவிகளை அழைத்து வந்ததை சுட்டிக்காட்டி கண்டித்துப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இது ஒருபுறம் இருக்கும் நிலையில் மனு அளித்த உடனே மறுநாள் சம்பவ இடத்திற்கு சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் சாலை குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்துள்ளார். பின்னர் அங்குள்ள அதிகாரிகளுக்கு சாலை குறித்து விரிவான அறிக்கை தர வேண்டும் என உத்தரவிட்டு சென்றுள்ள நிலையில் சாலை குறித்து அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.
மருதூர் பேரூராட்சி, விஸ்வநாதபுரம் பகுதியில் சாலைவசதி பணிகள் நடைபெற்று வருகிறதா என களத்தில் இறங்கி விசாரித்தபோது - விபரம் வேறு மாதிரி இருந்தது. அது என்னவென்றால் மருதூர் பேரூராட்சிக்குட்பட்ட விஸ்வநாதபுரம் பகுதியில் இரண்டு சமுதாயத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சாலை வசதி வேண்டி கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் ஒரு சமுதாயத்திற்கு சொந்தமான பட்டா இடம் உள்ளதாகவும், தங்களுக்கு சொந்தமான பட்டா இடத்தில் எப்படி சாலை பணிகள் மேற்கொள்ள அனுமதிப்பது என கேள்வி எழுப்பி உள்ளனர்.
இந்த சாலைக்காக ஏன் அந்தப் பகுதி பொதுமக்கள் ஒன்றுகூடி இதை கேள்வி கேட்கிறார்கள் என்று முழுமையாக விசாரித்தபோது, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக இன்னொரு தரப்பினர் உடைய பெண்ணை, புகார் அளிக்க வந்த தரப்பினர் காதல் திருமணம் செய்து கொண்டதால் இரு சமூகத்தினரிடையே மோதல் அப்போதே வெடித்துள்ளது. இந்நிலையில் அவர்கள் குறிப்பிட்ட பகுதிகளை இணைத்து சாலை வசதி கேட்பதால் அங்குள்ள ஒரு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களிடத்திலும் சாலைக்காக மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறியுள்ளனர். சாலை பணிகள் குறித்து ஒப்புதல் மற்றும் செலவு திட்ட அறிக்கையை தயார் செய்யப்பட்டு இன்னும் ஓரிரு நாளில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக மருதூர் பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவித்தார்.
இந்த சாலை வசதி வேண்டி மனு வழங்கிய செந்தில்குமாரிடம் கேட்டபோது, நாங்கள் கடந்த திங்கட்கிழமை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்க சென்றோம். அப்போது பள்ளி மாணவ, மாணவிகள் சீருடையுடன் அழைத்துச் சென்றதால், மாவட்ட ஆட்சித் தலைவர் எங்களிடம் கோபம் உற்றார். என்ன என்று விசாரித்த போதுதான் தெரிந்தது எங்களது நலனை காப்பது மாவட்ட நிர்வாகத்தின் கடமை, இப்போது உள்ள சூழ்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் வரை சீருடையில் அனைத்து வந்திருப்பது மிகவும் வருந்தத்தக்கது என அவர் சுட்டிக் காட்டியதை உணர்ந்தோம்.
”நாங்கள் செய்த தவறை உணர்கிறோம். அதே போல் மனு அளித்த மறுநாளே மாவட்ட ஆட்சித்தலைவர் எங்களிடத்தில் வந்து பார்வையிட்டு அதிகாரிகளுக்கு சாலை வசதி குறித்து ஆலோசனையும், அறிவுரையும் அழைத்துச் சென்றுள்ளார். 150 ஆண்டுகால சாலை வசதி போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இது மகிழ்ச்சி தருகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நாங்கள் பள்ளி சீருடையில் மாணவர்களை அழைத்துச் சென்ற நிகழ்வுக்கு வருத்தம் தெரிவிக்கிறோம். இதுபோன்று வேறு யாரும் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட வேண்டாம் என அவர் பேசும்போது கூறினார்” என்றனர்.