நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்; வீட்டை விட்டு வெளியேறிய மாணவர் - கரூரில் அதிர்ச்சி
நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த வருத்தத்தில் மாணவன் பிரதீஸ் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த வருத்தத்தில் 19 வயது மாணவர் வீட்டை விட்டு வெளியேறினார். மகனை காணவில்லை என தாய் அளித்த புகாரை பெற்று போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கருப்பக்கவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் செந்தில்குமார் - விஜயா தம்பதியினர். இவர்களுக்கு பிரதீஸ் என்ற மகன் உள்ளார். பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிரதீஸ் கடந்த 2 வருடமாக நீட் தேர்வுக்காக தீவிர பயிற்சி பெற்று வந்துள்ளார். கடந்த மாதம் 7ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு எழுதிய பிரதீஸ், தேர்வில் போதிய மதிப்பெண் எடுக்காத வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மன உளைச்சலில் இருந்த பிரதீஸ் கடந்த 8ஆம் தேதி காலை வீட்டில் இருந்து வெளியே சென்று, நீண்ட நேரம் ஆகியும் திரும்ப வரவில்லை. அக்கம்பக்கம், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தேடியும் மகனை காணவில்லை என்பதால் தாந்தோணிமலை காவல் நிலையத்தில் அவரது தாய் விஜயா புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் தாந்தோணிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.
நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த வருத்தத்தில் மாணவன் பிரதீஸ் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்