Vijayakanth: பொது இடத்தில் விஜயகாந்துக்கு சிலை, மணிமண்டபம்: பிரேமலதா கோரிக்கை
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பொது இடத்தில் சிலை, மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பொது இடத்தில் சிலை, மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே அவரின் உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டது. நேற்று முன்தினம் (டிச.28) காலை நுரையீரல் அழற்சி காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டது.
கேப்டன் என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. விஜயகாந்தை இறுதியாக ஒருமுறை காண தமிழ்நாடு முழுவதும் இருந்து மக்கள் சென்னையை நோக்கி வந்தனர். அலை கடலென மக்கள் திரண்டு வந்து விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினர்.
நேற்று மாலை அடக்கம்
முதலில் சென்னை, தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து நேற்று (டிச.29) மதியம் 2 மணிக்கு, விஜயகாந்தின் உடல் மீண்டும் தேமுதிக அலுவலகத்துக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. கோயம்பேடு ஜவஹர்லால் நேரு சாலையில் உள்ள அவரது கட்சி அலுவலக வளாகத்தில் மாலை 7.07 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது.
பிரபலங்கள் இரங்கல்
திரை பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் விஜயகாந்துக்கு நேரிலும் இணையதளத்திலும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் விஜயகாந்தின் மனைவியும் தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது விஜயகாந்துக்கு பொது இடத்தில் சிலை, மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து பேசிய அவர்,
தினந்தோறும் பூஜை, அலங்காரங்கள்
’’24 மணி நேரமும் இங்கு விளக்கு எரிந்து கொண்டிருக்கும். தினந்தோறும் பூஜைகள், அலங்காரங்கள் செய்யப்படும். கேப்டனின் ஊர்வலத்தில் முழு ஒத்துழைப்பு கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர்கள் ரவி, தமிழிசை ஆகியோருக்கு நன்றி.
உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றிகள். ஏனெனில் அவர் 3 முறை வந்தார். தலைமைக் கழகத்துக்கும் தீவுத் திடலுக்கும் இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வுக்கும் நேரில் வந்தார்.
அதேபோல திமுக அமைச்சர்கள், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், பாமக தலைவர் அன்புமணி, சசிகலா, ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்களுக்கும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராகுல் காந்தி, திருமாவளவன், வைகோ, அண்ணாமலை உள்ளிட்ட அனைவருக்கும் தேமுதிக சார்பில், நன்றி. ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
நினைவிடத்தில் பொது மக்கள் அஞ்சலி செலுத்தலாம்
தேமுதிகவை வெற்றிபெறச் செய்து, வெற்றியை அவரின் காலடியில் சமர்ப்பிப்போம். அனைவரும் வாருங்கள். அஞ்சலி செலுத்துங்கள். விஜயகாந்த் நினைவிடத்தில் பொது மக்கள் அஞ்சலி செலுத்தலாம். அதில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை’’ என்று பிரேமலதா தெரிவித்தார்.