Erode East By-Election: “கை வைக்கவேண்டியது இல்லை; கை சின்னத்தில் மை வையுங்கள்” - கமல்ஹாசன் பரப்புரை..
அறத்தின் சார்பாக நின்று ஓட்டு போட வேண்டும் - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
அறத்தின் சார்பாக நின்று ஓட்டு போட வேண்டும் - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27ல் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பாக தென்னரசு போட்டியிடுகிறார். இவர்கள் மட்டுமில்லாமல் நாம் தமிழர், தேமுதிக கட்சியும் களத்தில் உள்ளது. இந்தநிலையில் அதிமுக மற்றும் திமுக இரண்டு பேரும் இந்த தொகுதியில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். திமுக ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் நெருங்கும் நிலையில், இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. திமுக ஆட்சிக்கு மக்கள் அளிக்கும் ஆதரவு என்ற ரீதியில் இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் திமுக உள்ளது.
அதே நேரத்தில் கொங்கு மண்டலத்தை தங்களது கோட்டை என கூறிவரும் அதிமுகவும் இந்த தேர்தலை தீவிரமாக எதிர்கொள்ளவுள்ளது. தேர்தல் பணிகளுக்காக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் காங்கிரஸ் மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து கூட்டணி கட்சி தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து வாக்கு சேகரிக்க மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், ”ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து வாக்குகள் சேகரிக்க இன்று மாலை ஈரோடு வருகிறேன். மதவாதத்திற்கு எதிராக ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம்” என பதிவிட்டுள்ளார். நேற்று கருங்கல்பாளையம் காந்தி சிலையில் பிரசாரத்தை தொடங்கி, சூரம்பட்டி நால்ரோடு, சம்பத் நகர், உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த பிரச்சாரத்தின் போது, கமல் “நான் அரசியலுக்கு வந்தது லாபத்துக்கோ, ஆதாயத்திற்காகவோ அல்ல. நல்லது நடக்க வேண்டும் என அறம் நோக்கி கூட்டணிக்காக வந்துள்ளேன். நம் நாடு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும். அதற்கு என் ஆதரவை கொடுக்க வேண்டியது என் கடமை. நாம் கட்சிக்காக என்பதை விட அறத்தின் சார்பாக வாக்களிக்க போகிறோம் என நினைத்து வேண்டும். அறத்தின் பக்கம் நின்று வாக்களிக்க வேண்டும். மேலும் கிழக்கு இந்திய கம்பெனி போய் நார்த் இந்திய கம்பெனி வந்துவிட்டது ’’ என கூறினார். மேலும் தனது டிவிட்டர் பக்கத்தில், நம் மீது கை வைக்க நினைப்பவர்கள் மீது நாமும் கை வைக்கவேண்டியதில்லை. கை சின்னத்தில் மை வைத்தால் போதும். ஈரோடு கிழக்கில் ஆர்ப்பரித்த மக்கள் வெள்ளமும் அதை ஆமோதித்தது. ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம். தமிழகம் இந்தியாவிற்கு வழிகாட்டட்டும்! #ErodeByElection என பதிவிட்டுள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சி சார்பாகவும் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.