SSLC Exam 2023: கூடுதல் நேரம், இருக்கை வசதி.. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பு
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு, அரசுத் தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு, அரசுத் தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு:
’’நடைபெற உள்ள ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாற்றுத் திறனாளித் தேர்வர்கள் தொர்பாக கீழ்க்காணும் நடைமுறைகள் தவறாமல் பின்பற்றப்பட வேண்டும். இந்த அறிவுரையை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
1. இருக்கை வசதி:
அனைத்து வகை மாற்றுத் திறனாளித் தேர்வர்களுக்கும் தரைத் தளத்தில் மட்டுமே இருக்கை வசதி ஒதுக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
2.கூடுதல் நேரச் சலுகை:
கூடுதல் நேரச் சலுகை கோரிய மாற்றுத் திறனாளித் தேர்வர்கள் அனைவருக்கும், வழக்கமான தேர்வு நேரத்துடன் கூடுதலாக 60 நிமிடங்கள் (1 மணி நேரம்) தேர்வெழுத தவறாமல் அனுமதி வழங்கப்பட வேண்டும்.
3. டிஸ்லெக்சியா தேர்வர் விடைத்தாள்:
டிஸ்லெக்ஸியா பாதிப்புற்ற தேர்வர்களுக்கு, சொல்வதை எழுதுபவர் (Scribe) நியமிக்கப்படாமல் தேர்வரே தேர்வெழுதும் முதன்மை விடைத்தாளின் முதல் பக்கத்தில் சிவப்பு நிற மையினால் "டிஸ்லெக்ஸியா தேர்வர்/Dyslexia Students" எழுதப்படல் வேண்டும்.
4. செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளித் தேர்வர்களின் விடைத் தாள்:
செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளித் தேர்வர்களது முதன்மை விடைத்தாளில் முதல் பக்கத்தில் சிவப்பு நிற மையினால் செவித்திறன் குறைபாடுடைய தேர்வர் / HI Students என்று எழுதப்படல் வேண்டும்.
5. மாற்றுத் திறனாளி தேர்வர்களின் விடைத்தாட்களை சிப்பமாக்குதல்:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின்போது கூடுதல் நேரச் சலுகை பெற்று, தேர்வெழுதும் தேர்வர்கள் உள்ள அறையில் கண்காணிப்பாளர்கள், தேர்வு நேரம் முடிவடைந்தவுடன் பிற தேர்வர்களின் விடைத் தாள்களை சிப்பமாக்காமல் கூடுதல் நேரச் சலுகைப் பெற்று தேர்வெழுதும் தேர்வர்களின் தேர்வு நேரம் முடியும் வரை காத்திருக்க வேண்டும்.
மேலும், தேர்வு நேரம் (பிற்பகல் 01.15 மணி) முடிவடைந்தவுடன் நிலையான படை உறுப்பினர்களும் கூடுதல் நேரம் தேர்வெழுதும் தேர்வர்கள் உள்ள அறைக்குச் சென்று கூடுதலாக கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்.
பின்னர், மேற்குறிப்பிட்ட தேர்வரின் விடைத் தாள்களை மற்ற தேர்வர்களது விடைத்தாட்களுடன் சேர்த்து ஒரே சிப்பமாக்கி முதன்மைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்’’.
இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதையும் வாசிக்கலாம்: 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அனைத்துப் பாடங்களின் மாதிரி வினாத் தாள்களையும் காண: https://tamil.abplive.com/topic/question-bank என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
TNPSC Group 4 Result: குவிந்த 18 லட்சம் பேர்; முடங்கிய டிஎன்பிஎஸ்சி இணையதளம்- தேர்வர்கள் அதிர்ச்சி!