இலங்கையில் இருந்து மண்டபம் முகாமுக்கு கண்ணீருடன் வரும் இலங்கை தமிழர்கள்
பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பின் 19 இலங்கை தமிழர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படுவார்கள் என மெரைன் போலிசார் தெரிவித்துள்ளனர்
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு வந்த 20 இலங்கை தமிழர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று (10) அதிகாலை இரண்டு கை குழந்தையுடன் 5 குடும்பத்தை சேர்ந்த மேலும் 19 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடியை வந்தடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தனுஷ்கோடி இலங்கைக்கு அருகே உள்ளதால் இலங்கை தமிழர்கள் இறுதிக்கட்ட போரின் போது அகதிகளாக தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்குள் வந்த இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ளனர். இதே போல் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் கடும் விலை ஏற்றம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக இலங்கை தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக வரக்கூடும் என்பதால் சர்வதேச கடல் எல்லை பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என கடலோர பாதுகாப்பு குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப் பட்டிருந்ததது.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு ஒரு படகில் திருகோணமலையை சேர்ந்த 10 பேர் இரண்டு கை குழந்தைகளுடன் மன்னாரில் இருந்து புறப்பட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) அதிகாலை சுமார் 2 மணி அளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை ஒன்றாம் மணல் திட்டில் வந்து இறங்கி உள்ளனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராமேஸ்வரம் மெரைன் பொலிஸார் இலங்கைத் தமிழர்களை மீட்டு மண்டபம் மெரைன் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல் மன்னாரில் இருந்து நேற்று முன் தினம் சனிக்கிழமை (9) இரவு யாழ்பாணம் மற்றும் மன்னாரை சேர்ந்த 9 பேர் ஒரு படகில் மன்னாரில் இருந்து புறப்பட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) அதிகாலை தனுஷ்கோடி வந்து இறங்கி பின்னர் அரசு பேருந்து மூலம் தானாக மண்டபம் அகதிகள் முகாமிற்கு சென்றனர். இது குறித்து தகவலறிந்த மண்டபம் மெரைன் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை விலை ஏற்றம் மற்றும் மண்ணெய், டீசல், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால் தமிழகத்துக்கு அகதிகளாக வந்தாக பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இலங்கை தமிழர்கள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பின் 19 இலங்கை தமிழர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படுவார்கள் என மெரைன் போலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு நேற்று வந்த இலங்கை முல்லைத்தீவு மாவட்டம் செல்வபுரம் பகுதியை சேர்ந்த சுசீகலா அழுத படி கூறும்போது:- எனது கணவர் இரும்பு பட்டறை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் அங்கு அனைத்து பொருட்களும் பல மடங்கு விலை உயர்ந்து விட்டன. குழந்தைகளுக்கான பால் பவுடர், மருந்து பொருட்கள் கூட கிடைக்காமல் கடுமையாக கஷ்டப்பட்டோம். குழந்தைகளை காப்பாற்றி உயிர் வாழ்வதற்காகவே படகோட்டிகளுக்கு ரூ. 50 ஆயிரம் கொடுத்து இங்கு வந்துள்ளோம். இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ஆகியோரின் குடும்ப அரசியலே முக்கிய காரணம். இவ்வாறு அவர் கூறினார்.
வவுனியா பகுதில் இருந்து 3 மாத கர்ப்பிணி மனைவியுடன் வந்த கோடீஸ்வரன் கூறுகையில்,:- இலங்கையில் விவசாய கூலி வேலை செய்து வருகிறேன். விவசாயம் செய்வதற்கு விதைகள், பூச்சி மருந்து உள்ளிட்ட இடுபொருட்கள் கிடைக் காததால் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. எனது மனைவி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த சூழ்நிலையில் மிகுந்த கவனத்தோடு அவரை கவனிக்க வேண்டும். இதனால் மனைவியின் தங்க நகைகளை அடகு வைத்து அந்த பணத்தின் மூலம் படகில் ஏறி இங்கு வந்து சேர்ந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.இலங்கையில் இருந்து வந்த சுதா கூறியதாவது:- இலங்கையில் கடும் நெருக்கடியில் பொதுமக்கள் அதிக கஷ்டங்களை சந்தித்து வாழ்ந்து வருகின்றனர். அங்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி ஒரு கிலோ 300, சீனி ரூ.200, பிரட் பாக்கெட் ரூ.200, ஒரு பிஸ்கட் பாக்கெட் ரூ.300 என அனைத்து அத்தியாவசிய பொருட்களும் பல மடங்கு விலை உயர்ந்து விட்டன. வேலைவாய்ப்புகள் கிடையாது, மின்சாரம் இல்லை, மருந்து பொருட்கள் கிடைப்பதில்லை.
குறிப்பாக, குழந்தைகளுக்கான பால் பவுடர் கூட கிடைப்பதில்லை. குழந்தைகளுடன் தொடர்ந்து அங்கே வாழ முடியாத நிலை இருப்பதால்தான் குழந்தைகளின் உயிரை காப்பாற்றி உயிர் வாழ்வதற்காகவே படகோட்டிக்கு 1 லட்சம் ரூபாய் கொடுத்து இங்கு வந்துள்ளோம். தமிழ்நாடு அகதி களாக வந்துள்ள எங்களை ஆதரிக்கும் என்ற முழு நம்பிக் கையில் தான் இங்கு வந்துள்ளோம் என கண்ணீருடன் கூறினார்.