Special bus: 2 நாள் தொடர் விடுமுறை.! எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு போக்குவரத்து துறை சொன்ன குட் நியூஸ்
weekend holidays Special bus: வார இறுதி நாள் விடுமுறையையொட்டி அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்து இயக்கவுள்ளது.

2 நாள் தொடர் விடுமுறை
வேகமாக மாறி வரும் நவீன காலத்திற்கு ஏற்ப மக்களும் அதற்கு ஈடு கொடுத்து தினந்தோறும் ஓடிக்கொண்டிருக்கொண்டுள்ளனர். எனவே எப்போ தான் விடுமுறை கிடைக்கும் என காத்திருப்பார்கள். அந்த வகையில் ஒரு நாள் விடுமுறை கிடைத்தாலே மன நிம்மதியாக ஓய்வு எடுப்பார்கள். அதிலும் பண்டிகைக்காலங்களில் தொடர் விடுமுறை, வார இறுதி நாளில் வரும் இரண்டு நாள் தொடர் விடுமுறை என்றால் சுற்றுலாவிற்கு பறந்து விடுவார்கள். அந்த வகையில் வருகிற நவம்பர் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் வார விடுமுறை வரவுள்ளது. அதிலும் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் பள்ளிகள் முதல் அரசு அலுவலங்கள் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்து அறிவிப்பு
இந்த நிலையில் விடுமுறையை கொண்டாட வெளியூர் செல்லும் பயணிகளுக்காக போக்குவரத்து துறை சார்பாக சிறப்பான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக இயக்குநர் வெளியிட்டுள்ள தகவலில், நாளை 07/11/2025 (வெள்ளிக்கிழமை) நாளை மறுதினம் 08/11/2025 (சனிக்கிழமை) மற்றும் 09/11/2025 (ஞாயிறுக் கிழமை) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 07/11/2025 வெள்ளிக் கிழமை அன்று 55 பேருந்துகளும் 08/11/2025 சனிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்து
இதே போல சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 07/11/2025 (வெள்ளிக்கிழமை) அன்று 340 பேருந்துகளும், 08/11/2025 (சனிக்கிழமை) 350 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 100 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து 07/11/2025 மற்றும் 08/11/2025 ஆகிய நாட்களில் 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்து பயணிக்க அறிவுறுத்தல்
விடுமுறை முடிந்து ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.தற்போது வரை 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாகவும், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















