"போராட்டம் தொடர வேண்டும், தடைகளை தாண்ட வேண்டும்" திமுக மாநாட்டில் சோனியா காந்தி மாஸ் பேச்சு
தி.மு.க. மகளிர் மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக மகளிரணி சார்பில் சென்னை நந்தனத்தில், தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மகளிர் உரிமை மாநாடு நடைபெற்றது.
இந்த பிரம்மாண்ட மாநாட்டில், திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
"ஏழை மக்களுக்காக உழைத்தவர் கருணாநிதி"
இந்த மாநாட்டில் பேசிய சோனியா காந்தி, "தம்முடைய வாழ்க்கை முழுமையும் ஏழை எளிய மக்களுக்காக உழைத்தவரும், இந்திய தாயின் தவப்புதல்வர்களில் ஒருவரும் கலைஞர் என அழைக்கப்படக்கூடிய கருணாநிதி பன்முகத்தன்மை கொண்ட மாபெரும் தலைவர். ஒரு எழுத்தாளராக, பத்திரிகையாளராக, முதலமைச்சராக, நிர்வாகியாக அவர் ஆற்றிய பணிகள் மகத்தானவை.
மாநிலம், மொழி, சாதி, மத நம்பிக்கை, இவற்றுக்கு எல்லாம் அப்பாற்பட்டு எல்லாரையும் சமத்துவாக பார்க்கக்கூடிய ஓர் அருமையான தத்துவத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார். தன் வாழ்நாளின்போது, அதிகமாக பேசப்படாத பாலின சமத்துவத்தை அவர் சிந்தித்து அதற்காக போராடும் போராளியாக தன்னை அடையாளப்படுத்தி கொண்டார். இன்று அது தேசிய இயக்கமாக உருவாகக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.
"குடும்பத்தின் மைய பொருளாக பெண்கள் ஆற்றுகின்ற பணி மகத்தானது"
நம்முடைய பெண்கள் இந்தியாவில் மகத்தான சாதனைகளை செய்திருக்கிறார்கள். மரபு வழி சமூகம், ஆணாதிக்க சமூகம், கலாசாரம் என்ற தடைகளை எல்லாம் மீறி அவர்கள் மிக அருமையான சாதனைகளை செய்து முடித்திருக்கிறார்கள். இந்த நீண்ட நெடிய போராட்டத்தில் ஏற்றங்களும் இருந்திருக்கின்றன. இறக்கங்களும் இருந்திருக்கின்றன. இன்று இந்திய பெண்கள் பல்வேறு துறைகளில் ஒளிர்கிறார்கள்.
சிலவற்றை சொல்ல வேண்டுமானால், விஞ்ஞானத்தில், அறிவிலே, ஆற்றாலிலே, கலாசாரத்திலே, விளையாட்டிலே இவை எல்லாவற்றுக்கும் மேலாக நமது குடும்பத்தின் மைய பொருளாக குடும்பத்தின் மைய பொருளாக மக்கள் தலைவர்களாக அவர்கள் ஆற்றுகின்ற பணி மகத்தானது. இருந்தாலும், இந்த போராட்டம் நீண்ட காலம் தொடர வேண்டும். பல தடைகளை தாண்ட வேண்டும்.
இருந்தாலும் நம் ஏழை எளிய சகோதரிகள் இன்னும் ஏராளமான தடையை தாண்டித்தான் இந்த சமத்துவத்தை பெறுவதற்கான சூழல் உருவாகியுள்ளது. மகாத்மா காந்தியின் தலைமையில் ஏற்று கொள்ளப்பட்ட சாத்விகமான வன்முறையற்ற சுதந்திர போராட்டம் மகளிர் சுமத்துவத்தை முன்னிலைப்படுத்தியது" என்றார்.
தமிழ்நாட்டை புகழ்ந்து பேசிய சோனியா காந்தி, "பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்களால் தமிழ்நாட்டை இந்தியாவே இன்று கொண்டாடுகிறது. மகளிர் இடஒதுக்கீடு தற்போது தற்போது தெளிவில்லாத நிலையில் உள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அது அமலாகும். பெண்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டால் நாடு வலிமை பெறும்" என்றார்.
இதையும் படிக்க: Priyanka Gandhi: "பெரியாரின் அந்த கேள்வி இன்று வரை நீடிக்கிறது" - மகளிர் உரிமை மாநாட்டில் பிரியங்கா காந்தி பேச்சு