Madras HC: ”ஷரியத் கவுன்சில் நீதிமன்றமா? விவாகரத்து வழங்க உரிமை இல்லை” : உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி
Madras HC: ஷரியத் கவுன்சில் தனியார் அமைப்பு மட்டுமே தவிர நீதிமன்றம் அல்ல என, உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
Madras HC: ஷரியத் கவுன்சிலால் விவாகரத்து வழங்க முடியாது என, உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி
ஷரியத் கவுன்சில் என்பது ஒரு தனியார் அமைப்பே தவிர நீதிமன்றம் அல்ல என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இஸ்லாமிய மருத்துவ தம்பதி, முத்தலாக் அடிப்படையில் பிரிந்தது தொடர்பான சிவில் சீராய்வு மனுவை விசாரித்தபோது நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஷரியத் கவுன்சிலான தௌஹீத் ஜமாத் அமைப்பு, அந்த குறிப்பிட்ட கணவருக்கு விவாகரத்து சான்றிதழ் வழங்கி உள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் தலைமையிலான அமர்வு, தௌஹீத் ஜமாத் அமைப்பு குடும்பம் மற்றும் நிதிப் பிரச்சினைகளைத் தீர்க்க உதவினாலும், விவாகரத்துச் சான்றிதழை வழங்க முடியாது என கூறியது.
நீதிபதி அதிருப்தி:
முத்தலாக் கோரிய கணவரின் மனுவை சபை ஏற்றுக்கொண்டு மத்தியஸ்தம் செய்ய முயற்சித்ததாகவும், ஆனால் மனைவி ஒத்துழைக்கவில்லை என்றும் கணவர் குற்றம் சாட்டுவது அதிர்ச்சி அளிப்பதாக நீதிபதி குறிப்பிட்டார். மேலும், “அரசால் முறையாக அமைக்கப்பட்ட நீதிமன்றங்கள் மட்டுமே தீர்ப்புகளை வழங்க முடியும். ஷரியத் கவுன்சில் ஒரு தனியார் அமைப்பு, நீதிமன்றம் அல்ல” என கூறி கணவரின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், "அதிகார எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்தில் இருந்து விவாகரத்திற்கான அறிவிப்பு பெறப்படாத வரை, அந்த தம்பதி இடையேயான திருமணம் செல்லும்” எனவும் நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
வழக்கு விவரம்:
2018 ஆம் ஆண்டில் மனைவி முத்தலாக் விவாகரத்தை மறுத்து, குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாப்பதன் கீழ், திருநெல்வேலி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், தனது திருமணம் இன்னும் செல்லுபடியாகும் என்று வலியுறுத்தினார். இருப்பினும், அதே ஆண்டில் கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
2021 ஆம் ஆண்டில் வழக்கு விசாரணையின் முடிவில், மாஜிஸ்திரேட் முதல் மனைவிக்கு ஆதரவாக தீர்ப்பளித்தார். குடும்ப வன்முறைக்கு இழப்பீடாக 5 லட்ச ரூபாயும், அவர்களின் மைனர் குழந்தையின் பராமரிப்புக்காக மாதம் 25,000 ரூபாயும் வழங்க வேண்டும் என்று கணவருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து கணவரின் மேல்முறையீட்டு மனுவையும் செஷன்ஸ் நீதிமன்றம் நிராகரித்தது. அதைதொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவர் சீராய்வு மனுவை தாக்கல் செய்தார்.
அதில், "கணவரின் ஒருதலைப்பட்சமான தீர்மானத்திற்கு பிரச்சினையை விட்டுவிட முடியாது, ஏனெனில் அது கணவன் தனது சொந்த காரணத்திற்காக நீதிபதியாக மாறுவதற்கு சமம். கணவரின் இரண்டாவது திருமணம் அந்த பெண்ணுக்கு கணிசமான மன உளைச்சலையும் வலியையும் ஏற்படுத்தியுள்ளது. இது கொடுமைக்கு நிகரானது” என்று நீதிபதி தெரிவித்தார்.