அரசு பஸ்ஸா இது? இல்லை விமானமா? களமிறங்கிய புதிய 'வால்வோ' ஏசி பேருந்து - ஒரு மணிநேரப் பயணம் சேவிங்!
திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் கோவை செல்லும் வால்வோ 'ஏசி' பேருந்துகளில் ஒரு மணிநேரம் வரை பயண நேரம் குறைந்துள்ளது.

சென்னை : சென்னை: தமிழ்நாட்டின் நீண்டதூர அரசுப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் முயற்சியாக, குளிர்சாதன வசதியுடன் கூடிய புதிய வால்வோ பேருந்துகள் பொதுச் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
அதிநவீன வால்வோ ஏசி பேருந்துகள்
தமிழ்நாட்டின் நீண்டதூர அரசுப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் முயற்சியாக, குளிர்சாதன வசதியுடன் கூடிய புதிய வால்வோ பேருந்துகள் பொதுச் சேவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. சென்னை தீவுத் திடல் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் புதிதாக சேர்க்கப்பட்ட இந்த பேருந்துகளின் இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு 130 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 110 பேருந்துகள் குளிர் சாதன வசதியில்லாத இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்டவை. மீதமுள்ள 20 பேருந்துகள் குளிர்சாதன இருக்கை வசதி கொண்ட வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பேருந்துகளை சென்னை தீவுத்திட லில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த 20 அதிநவீன வால்வோ குளிர் சாதன சொகுசுப் பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நீண்டதூர பயணங்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. முழுமையான குளிர்சாதன வசதி, வசதியான இருக்கைகள் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களுடன் தனியார் சொகுசு பேருந்துகளுக்கு இணையான சேவையை அரசு போக்குவரத்திலும் வழங்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.
அதைத்தொடர்ந்து சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர், நாகர் கோவில், திருச்செந்தூர், திருப்பூர், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன.
கட்டண விவரம்:
சென்னை - நாகர்கோவில் ரூ. 1,215
சென்னை - திருச்செந்தூர் ரூ.1,115
சென்னை - திருநெல்வேலி ரூ. 1,080
சென்னை - கோவை ரூ. 880
சென்னை - திருப்பூர் ரூ. 800
சென்னை - மதுரை ரூ. 790
கோவை - பெங்களூரு ரூ. 770
சென்னை - பெங்களூரு ரூ. 735
சென்னை - சேலம் ரூ. 575
சென்னை - திருச்சி ரூ. 565 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து விரைவு போக்குவரத்து கழக அதிகாரி கூறியதாவது:
அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு, 34.30 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட, 20 'வால்வோ ஏசி' பேருந்துகளின் சேவை, சென்னையில் நேற்று முன்தினம் துவக்கி வைக்கப்பட்டது. சென்னையில் இருந்து, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்செந்துார், கோவை, திருப்பூர், பெங்களூரு உள்ளிட்ட வழித்தடங்களில் இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஒரு மணிநேரம் குறையும்
முதல் நாளிலேயே, பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அனைத்து பேருந்துகளிலும், அடுத்த மூன்று நாட்களுக்கு, டிக்கெட் முன்பதிவு முடிந்துள்ளது. வழக்கமாக செல்லும், விரைவு சொகுசு பேருந்துகளை காட்டிலும், வால்வோ 'ஏசி' பேருந்துகள் செல்லும் வழி மாற்றப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் அனைத்தும், நெடுஞ்சாலை வழியாக மட்டுமே செல்லும். அதையொட்டி அமைந்துள்ள முக்கிய பேருந்து நிலையங்களுக்கு மட்டுமே செல்லும்.
குறிப்பாக, விழுப்புரம் உள்ளே செல்லாது. இதனால், திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் கோவை செல்லும் வால்வோ 'ஏசி' பேருந்துகளில், ஒரு மணிநேரம் வரை பயண நேரம் குறைந்துள்ளது. விரைவு பேருந்துகளை, பாதுகாப்பாக இயக்க வேண்டும் என, ஓட்டுநர்களிடம் தொடர்ந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என அவர் கூறினர்.





















