"செந்தில் பாலாஜி உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை" - பகீர் கிளப்பும் திமுக பொருளாளர் டி.ஆர். பாலு..!
"நெருக்கடி காலத்தில் நெருப்பாற்றில் நீந்தியவர் ஸ்டாலின். மிரட்டலுக்கு பணியாத மாநிலம் தமிழ்நாடு என்பதை மறந்து விடக்கூடாது" என திமுக பொருளாளர் டி.ஆர். பாலு பேசியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை கண்டித்து, கோவை சிவானந்தா காலனி பகுதியில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய திமுக பொருளாளர் டி.ஆர். பாலு, பாஜகவை கடுமையாக விமர்சித்தார். “கொங்கு மண்டலத்தின் இன தலைவனுக்கு கொடுமை இழைக்கப்பட்டுள்ளது. சனாதன பாஜக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். செந்தில் பாலாஜி என்ன வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என இதுவரை தெரிவிக்கவில்லை.
"செந்தில் பாலாஜி உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை"
சம்மன் கொடுக்காமல், வழக்கு பற்றி தெரிவிக்காமல் கையெழுத்து போடுமாறு அமலாக்கத்துறையினர் கொடுமைப்படுத்தியுள்ளனர். அதைப்பற்றி நீதிமன்றத்தில் நேரம் வரும் போது சொல்வோம். அவர் தாக்கப்பட்டுள்ளார். மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜி இதய வலியால் துடித்த போது, நடிக்கிறார் என நினைத்து அதிகாரிகள் அவரை பிடித்து தூக்கியுள்ளார்கள்.
அப்போது தலை கான்கீரிட் சிலாப்பில் அடித்ததில் தலையில் அடிபட்டுள்ளது. மன உளைச்சலுக்கு ஆளாக்கிய அதிகாரிகள் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். 8 நாட்கள் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பது என்ன அநியாயம்? 3 அடைப்புகள் இருப்பதால் ஆப்ரேசன் செய்ய வேண்டும்.
செந்தில் பாலாஜி உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இருதய நோயாளிக்கு ஓய்வு வேண்டும். ஆனால், அவரிடம் விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 6 மாதத்தில் வரலாம். ஒரு வருடத்தில் வரலாம். தேர்தலுக்கு பிறகு இந்த அதிகாரிகள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
"ஆட்டுக்குட்டி அண்ணாமலையை நீதிமன்றத்திற்கு அழைத்துள்ளேன்"
மனிதநேயமில்லாத செயலை செய்யும் மத்திய அரசின் அதிகாரிகள் பதில் சொல்ல வேண்டும். விசாரணை கமிசன் போடுவோம். செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தர லஞ்சம் வாங்கியதாக எங்கும் நிரூபிக்கவில்லை. ஊழல் வழக்கிற்கும், சட்ட விரோத பண பரிவர்த்தனைக்கும் சம்மந்தம் இல்லை.
அதிமுக ஆட்சியில் அளிக்கப்பட்ட புகாருக்கு, திமுக ஆட்சியில் தலைமை செயலகத்திற்குள் நுழைந்து மிரட்டி பார்க்கிறார்கள். யாரை மிரட்டுகிறீர்கள்? நெருக்கடி காலத்தில் நெருப்பாற்றில் நீந்தியவர் ஸ்டாலின். மிரட்டலுக்கு பணியாத மாநிலம் தமிழ்நாடு என்பதை மறந்து விடக்கூடாது. யாரும் புற முதுகிட்டு ஓடும் கோழைகள் அல்ல.
அரவக்குறிச்சியில் தோற்ற ஆட்டுக்குட்டி அண்ணாமலையை நீதிமன்றத்திற்கு அழைத்துள்ளேன். 14ஆம் தேதி வருவார். கவலைப்படாதீர்கள். அரவக்குறிச்சி தேர்தலில் தோற்று பின்னங்கால் தோளில் பட ஓடியவர். கொங்கு மண்டலத்தில் தேர்தல்களில் வெற்றி வாகை சூட காரணமாக இருந்தவர் செந்தில் பாலாஜி.
கொங்கு மண்டலத்தின் முக்கிய தலைவராக செந்தில் பாலாஜி விளங்குகிறார். 2015இல் ஜெயலலிதா ஆட்சியில் போடப்பட்ட வழக்கை தூசி தட்டி எடுத்து வருகிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் உள்ள 11 சீட்டுக்காக அலைகிறார்கள். கொங்கு மண்டலம் கோபாலபுரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
நாடாளுமன்ற தேர்தலில் செந்தில் பாலாஜி தலைமையில் 11 இடங்களில் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆட்சிக்கு மீண்டும் ஒரு மகுடன் சூட்டுவோம். நாடாளுமன்ற தேர்தல் வெற்றி விழா, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா கோவையில் நடக்கும்” எனத் தெரிவித்தார்.