காலமானார் மூத்த பத்திரிகையாளர் துரைராஜ்..
மூத்த பத்திரிகையாளர் துரைராஜ் உயிரிழப்புக்கு அரசு சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது
பிடிஐ, தி இந்து, பிரண்ட்லைன், லிங்க் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற மூத்த பத்திரிகையாளர் எஸ்.துரைராஜ்.
மன்னார்குடி மீத்தேன் திட்டம் ரத்து செய்வதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று Frontline இதழில் கடந்த டிசம்பர் 2012 ல் வந்த Mines of concern என்ற அரசின் கவனத்தை ஈர்த்த கட்டுரை. அந்தக் கட்டுரையை எழுதியது துரைராஜ்.
மேலும் அதனைத் தொகுக்க நான்கு நாள்கள் டெல்டா பகுதியில் பயணம் செய்தார், இடைக்காலத் தடை மற்றும் நிரந்தர தடை விதித்தபோது அது தொடர்பான செய்திகளை சிறப்பாக கொண்டுவந்தார். PTI, The Hindu மற்றும் Frontline ல் பணியாற்றியவர், Front lineல் ஒய்வு வயதுக்கு பிறகும் சில ஆண்டுகள் பணியாற்றினார், டெல்டா வறட்சி மற்றும் விவசாயிகள் மரணத்தை பற்றி அவர் எழுதிய சிறப்பு கட்டுரை அரசின் கவனத்தை ஈர்த்தது.
துரைராஜ் இன்று உயிரிழந்தார். அவரது இறப்புக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பிடிஐ, தி இந்து, பிரண்ட்லைன், லிங்க் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற மூத்த பத்திரிகையாளர் எஸ்.துரைராஜ் உடல்நலக் குறைவால் மறைவுற்ற செய்தி அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
இடதுசாரிப் பார்வையும் மனிதநேயப் பற்றும் கொண்டிருந்த துரைராஜ் அவர்கள், எளிய மக்களின் உரிமைகள் மற்றும் ஏற்றத்துக்கான கருவியாக தன் பணியைப் பயன்படுத்திக் கொண்டார். பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகளிலும் பொறுப்பு வகித்த அவர், அடக்குமுறைகளுக்கு எதிரான தனது செயல்பாடுகளுக்குப் பெயர் பெற்றவர்.
அவரது மறைவால் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஊடகத்துறையைச் சார்ந்த நண்பர்களுக்கும் இத்தருணத்தில் எனது ஆழந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பத்திரிகைத் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தி இந்து, ஃப்ரண்ட்லைன், பி.டி.ஐ உள்ளிட்ட பல்வேறு முன்னனி செய்தி நிறுவனங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மூத்த பத்திரிகையாளர் மற்றும் பல்வேறு பத்திரிகையாளர்கள் அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளை வகித்த திரு.எஸ்.துரைராஜ் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக இன்று (15.01.2022) இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்