School Holiday: புயல் எச்சரிக்கை! நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...எந்தெந்த மாவட்டங்கள்?
நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே டிசம்பர் 5ஆம் தேதி முற்பகலில் புயல் கரையை கடக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கை:
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றுக்கு தாழ்வு மண்டலமாக இன்று காலை 8:30 மணி அளவில் சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கில் சுமார் 450 கி.மீ தொலைவிலும், புதுவைக்கு அருகே சுமார் 670 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இது தொடர்ந்து மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை புயலாக வலுப்பெறக்கூடும். அதன் பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து 4ஆம் தேதி பிற்பகல் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனையொட்டியுள்ள வட தமிழக கடல் பகுதியில் நிலை கொள்ளும். அதன் பின்னர் வடக்கு திசையில் நகர்ந்து நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே 5 ஆம் தேதி முற்பகலில் புயலாக கரையை கடக்கக்கூடும். இதனால், கடலோர மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்து காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை:
இந்நிலையில், மிக்ஜாம் புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 4ஆம் தேதி (திங்கள் கிழமை) விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அதி கனமழை காரணமாக பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம் எனவும், மீனவர்கள் பாதுகாப்பாக இருக்கவும் ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தொடரும் கனமழை:
03.12.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
04.12.2023: வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
05.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
06.12.2023 முதல் 08.12.2023 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பொதுவாக மிதமான மழை பெய்யக்கூடும், ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன- மிக கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.