சென்னைக்கு விமானத்தில் பறந்து வரும் முருங்கைக்காய்! கிலோ இவ்வளவா?
வட மாநிலங்களில் இருந்து விமானங்கள் மூலமாக சென்னைக்கு முருங்கைக்காய் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால், முருங்கைக்காயின் விலை உச்சத்தில் விற்பனையாகிறது.
தமிழ்நாட்டில் மிகவும் எளிதாக கிடைக்கும் காய்களில் ஒன்றாக இருப்பது முருங்கைக்காய். இரும்புச்சத்து உள்ளிட்ட ஏராளமான சத்துக்களை கொண்ட காய்களை உள்ளடக்கிய முருங்கைக்காய் கிராமப்புறங்களில் பெரும்பாலான வீடுகளில் எளிதாக கிடைக்கும். ஆனால், நகர்ப்புறங்களில் பெரும்பாலும் கடைகளில் காசு கொடுத்து வாங்கும் சூழலே நிலவுகிறது. சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் சந்தைகளில் முருங்கைக்காய் விற்பனை எப்போதும் அமோகமாகவே நடைபெற்று வருகிறது.
விமானத்தில் வரும் முருங்கைக்காய்:
தமிழ்நாட்டில் முருங்கைக்காய் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வரத்து குறைவாக சந்தைகளில் காணப்படும். இதனால் மும்பை, குஜராத், மகாராஷ்ட்ரா போன்ற வட மாநிலங்களில் இருந்து முருங்கைக்காய் கொண்டு வரப்படுகிறது. தற்போது முருங்கைக்காயை வட மாநிலங்களில் இருந்து விரைவாக சென்னைக்கு கொண்டு வருவதற்காக விமானங்கள் மூலமாக வியாபாரிகள் இறக்குமதி செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக, முருங்கைக்காய் விலை சென்னை கோயம்பேட்டில் நேற்று ரூபாய் 400 வரை விற்பனையாகி வருகிறது. கிலோ ரூபாய் 350க்கு விற்பனையாகி வந்த முருங்கைக்காய் விலை தற்போது ரூபாய் 400க்கு விற்பனையாகி வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சரிந்த தக்காளி, பீன்ஸ்:
தனிநபர்கள் மட்டுமின்றி உணவகங்களும் இதனால் முருங்கைக்காய் வாங்குவதற்கு தயங்கி வருகின்றனர். ஒரு காயின் விலையும் வழக்கத்தை விட அதிகமாகவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் வரையிலும் முருங்கைக்காயின் விலை உச்சத்திலே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முருங்கைக்காய் விலை உச்சத்திற்கு சென்றாலும் பீன்ஸ், தக்காளி விலை சரிந்துள்ளது. பீன்ஸ் விலை ரூபாய் 80ல் இருந்து ரூபாய் 45க்கு விற்பனையாகி வருகிறது. தக்காளி விலை கிலோ ரூபாய் 10க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனாலும், மற்ற காய்கறிகளின் விலை கிலோவிற்கு ரூபாய் 50க்கு குறையாமல் விற்பனையாகி வருகிறது. இதனால், பொதுமக்கள் விலை குறைந்த காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.