School Education : அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
அங்கீகாரம், தொடர் அங்கீகாரம் இல்லாத அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சுயநிதி பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்கக்கோரி தொடக்க கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்
தொடக்க கல்வி இயக்கத்தின் கீழ் செயல்படும், அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், சுயநிதியில் செயல்படும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் மற்றும் இளம் மழலையர் பள்ளிகள் ஆகிய பள்ளிகளில் தொடக்க அனுமதி, அங்கீகாரம் மற்றும் தொடர் அங்கீகாரம் பெறாமல் செயல்படும் பள்ளிகள் சார்பான விவரங்களை அனுப்புமாறு தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநர் பழனிசாமி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இந்த சுற்றறிக்கையில் அங்கீகாரம் பெறுவதற்குரிய முழுமையான வடிவில், கருத்துரு அளிக்க இயலாத பள்ளிகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்கவும் அப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளை உடனடியாக வேறு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் துவக்க அனுமதி மற்றும் தொடர் அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகளின் நிர்வாகிகளுக்கு பள்ளியை மூடுவதற்கு உரிய தாக்கீது அனுப்பி நடவடிக்கை எடுக்கவும் தொடக்க கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தொடக்க அங்கீகாரம், தொடர் அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகள் செயல்படுமானால் சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் முதன்மை கல்வி அலுவலரே பொறுப்பேற்க நேரிடும் எனவும் தொடக்கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )