‛சமூகநீதி காத்த அமைச்சர் சேகர்பாபு...’ புகழ்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன்!
அன்னதானத்தில் சாப்பிட அனுமதிக்கப்படாத நரிக்குறவ பெண்ணின் விடியோ வைரலானதை தொடர்ந்து, இந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, தன் அருகில் அமரவைத்து அவருடன் உணவு உட்கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே ஸ்தலசயன பெருமாள் கோயில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இந்த கோயில் உள்ளது. தமிழக அரசின் அன்னதானத் திட்டத்தின்கீழ் நாள்தோறும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கோயிலில் நடைபெற்ற அன்னதான பந்தியில் நரிக்குறவ பெண் ஒருவரை, உணவு சாப்பிடக் கூடாது என்றும் "மிச்ச மீதி இருந்தால் போடுவோம், ஓரமாக நில்லுங்கள்" என்றும் சிலர் திருப்பி அனுப்பி அவமான படுத்தினர் என்று புகார் தெரிவித்த நரிக்குறவ பெண் ஒருவர், பிரபல யூட்யூப் சேனலுக்கு பேட்டி கொடுத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. அந்த வீடியோவில் "நாங்களும் மனிதர்கள் தான் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் புறக்கணிக்கிறார்கள், நாங்கள் படிக்கவில்லை, நன்றாக உடை அணியவில்லை என்று தானே புறக்கணிக்கிறீர்கள், இப்போது நாங்களும் நன்றாக உடை உடுத்துகிறோம் எங்கள் குழந்தைகளை படிக்க வைக்கிறோம், எல்லாம் மாறும் காலம் வரும்" என்று நம்பிக்கையோடு தெரிவித்திருந்தார்.
நரிக்குறவர்களுடன் உணவருந்தி...
— வைகைச்செல்வன் (@vaigaichelvan) October 30, 2021
சமூக நீதியைக் காத்த...
மாண்புமிகு இந்து அறநிலையத்துறை அமைச்சர் திரு.சேகர்பாபு பாராட்டத்தக்கவர்...!
இந்நிலையில், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஸ்தலசயன பெருமாள் கோயிலில் நேற்று கும்பாபிஷேகப் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். பின்னர், சமூக வலைதளத்தில் குற்றச்சாட்டு தெரிவித்திருந்த நரிக்குறவப் பெண் உட்படப் பொதுமக்களுடன் கோயில் வளாகத்தில் அமர்ந்து, அன்னதானத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்டார். யாருக்கும் ஏற்றத்தாழ்வின்றி சரி சமமாக வழங்கப்பட்ட அன்னதான நிகழ்வுக்கு பிறகு அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அதில், "நரிக்குறவ சமுதாயத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் ஸ்தலசயன பெருமாள் கோயிலில் முதல் பந்தியில் அன்னதானம் வழங்கவில்லை எனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக, முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. எனவே, அந்தப் பெண் உட்பட அனைவருடனும் கோயில் வளாகத்தில் அமர்ந்து உணவு சாப்பிட்டோம்" என்றார்.
அமைச்சரின் இந்த செயல் புகைப்படமாக மீண்டும் வைரலானது. அமைச்சர் சேகர் பாபுவை பாராட்டிய நெட்டிசன்கள் பலர் அந்த புகைப்படத்தை பகிந்திருந்தனர். அன்னதானத்தில் சரி சமமாக அமர்ந்து சாப்பிட்டதற்கும், நரிக்குறவ பெண்ணுக்கு முன்னுரிமை அளித்து அனைவரும் சமமாக அமர்ந்து உண்டதற்கும் பலரிடம் இருந்தும் பாராட்டுக்கள் வந்தன. அதிலும் கட்சி பேதம் பாராமல் அ.தி.மு.க.வை சேர்ந்த வைகைச்செல்வன் மனம் விட்டு அமைச்சர் சேகர் பாபுவை ட்விட்டரில் பாராட்டியிருந்தார். அமைச்சரின் செயலை பாராட்டிய வைகைச்செல்வன் "நரிக்குறவர்களுடன் உணவருந்தி… சமூக நீதியைக் காத்த… மாண்புமிகு இந்து அறநிலையத்துறை அமைச்சர் திரு.சேகர்பாபு பாராட்டத்தக்கவர்...!" என்று ட்வீட் செய்துள்ளார்.