காட்டு யானைக்கு பழம் கொடுத்த நபர்... வனத்துறை அதிரடி நடவடிக்கை... முழு விவரம்
கையில் வைத்திருந்த வாழைப்பழங்களை வீசி யானையை வாகனத்திற்கு அருகே வரவழைத்த அந்த நபர், அந்தச் செயலை வீடியோவாக பதிவுசெய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

சத்தியமங்கலத்தில் காட்டு யானைக்கு பழம் கொடுத்த நபரை கைது செய்து 10,000 ரூபாய் அபராதத்தையும் வனத்துறை விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது
வைரல் வீடியோ:
சத்தியமங்கலம் அருகே, வனப்பகுதியில் இருந்த ஒரு காட்டு யானை, வாகன ஓட்டுநர்களை பயமுறுத்தியது. ஆனால், யானையை விரட்ட வேண்டிய நேரத்தில், ஒருவர் வாகனத்தில் இருந்து இறங்கி யானைக்கு அருகில் செல்ல முயற்சி செய்தார். கையில் வைத்திருந்த வாழைப்பழங்களை வீசி யானையை வாகனத்திற்கு அருகே வரவழைத்த அந்த நபர், அந்தச் செயலை வீடியோவாக பதிவுசெய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த சம்பவம் வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து அந்த நபரை அடையாளம் கண்டுபிடித்தனர். விசாரணையில், அவர் சத்தியமங்கலத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
வனச்சட்டத்தின்படி கடும் நடவடிக்கை
இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் தெரிவித்ததாவது, "வன உயிரினங்களை அணுகுவதும், உணவு வழங்குவதும் மிகவும் ஆபத்தானது. இது உயிரிழப்பு ஏற்படும் அபாயத்தை ஏற்படுத்தலாம். இதேபோன்ற செயல்கள் வனச்சட்டம் மற்றும் விலங்குஆர்வலர்கள் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு எதிரானது" எனக் கூறினர்.
கைது செய்யப்பட்ட நபருக்கு வனத்துறை ரூ.10,000 அபராதம் விதித்ததோடு, வனச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வனத்துறையின் எச்சரிக்கை
“பொதுமக்கள் யாரும் வன உயிரினங்களை கண்டு உற்சாகத்தில் செயல்படக் கூடாது. வன உயிரினங்களின் இயல்பான வாழ்வைத் தொந்தரவு செய்யும் எந்தவொரு நடவடிக்கையும் சட்டவிரோதமாகும். மக்கள் அவற்றை பின்பற்ற வேண்டும்” என வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், வனப்பாதுகாப்பு பகுதிகளில் பயணிக்கும் வாகன ஓட்டுநர்கள் உயிரினங்களை தொந்தரவு செய்யும் செயலை தவிர்க்க வேண்டும் என்றும், யானைகள் உள்ளிட்ட வன உயிரினங்களை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.






















