MLA Ruby Manoharan: எனக்கு கட்சியில் எந்த நெருக்கடியும் இல்லை: ரூபி மனோகரன் திட்டவட்டம்
காங்கிரஸ் கட்சியில் எனக்கு எந்த நெருக்கடியும் இல்லை என ரூபி மனோகரன் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியில் எனக்கு எந்த நெருக்கடியும் இல்லை என ரூபி மனோகரன் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்தார்.
திருநெல்வேலி நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினரான ரூபி மனோகரன், கட்சியின் மாநில பொருளாளராகவும் உள்ளார். திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸில் இவர் நியமித்த நிர்வாகிகளுக்கு பதிலாக கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் புதிய நிர்வாகிகளை நியமித்திருந்தார். இதனால் இருவருக்கும் இடையே போட்டி நிலவி வந்தது.
அதன் தொடர்ச்சியாக, ரூபி மனோகரன் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்யமூர்த்தி பவனில் ஜெயகுமாருக்கு எதிராக புகார் அளிக்க சென்று இருந்தார். மேலும் காங்கிரஸ் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயகுமாரை மாற்றக்கோரி ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் சத்தியமூர்த்தி பவனில் முற்றுகையிட்டனர்.
நிர்வாகிகள் கூட்டத்துக்கு வந்த மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், கே.எஸ். அழகிரியை ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதால் மோதல் வெடித்தது. போராட்டத்தை தூண்டி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக ரூபி மனோகரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது.
இந்நிலையில், ஒழுங்கு நடவடிக்கை பரிந்துரையின் பேரில், சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற மோதல் குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டதற்கு, அவர் 15 நாட்கள் அவகாசம் கேட்டு இருந்ததாகவும், ஆனால் அவர் அளித்த விளக்கம் ஏற்றதாக இல்லை, எனவே அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர். ராமசாமி தெரிவித்தார்.
ஆனால், ரூபி மனோகரன் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு, காங்கிரஸ் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் ரூபி மனோகரன் மீதான சஸ்பெண்ட் உத்தரவு நிறுத்தி வைப்பதாக காங்கிரஸ் தமிழக மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று நெல்லையில் செய்தொயாளர்களிடம் பேசிய அவர்,
காங்கிரஸ் கட்சியில் தவறுகள் இனி நடக்காது, ராகுல் காந்தி இளைஞர்களையும் மூத்தவர்களையும் அரவணைத்து காங்கிரஸ் கட்சியை ஒரு பலமான கட்சியாக உருவாக்குகிறார். 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் இந்தியாவில் மிகப் பெரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் அதற்கான பணிகள் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாட்டு மக்களிடையே ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. வேலையின்மை, விவசாயிகள் கொடுமை, பொருளாதார வீழ்ச்சி போன்ற பல விஷயங்களில் மக்கள் கொந்தளித்து போய் இருக்கிறார்கள்.
நாட்டில் யாரும் சந்தோஷமாக இல்லை. குறிப்பாக இளைஞர்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தமிழகம் கடந்த 10 ஆண்டு பெரிய கஷ்டத்தில் இருந்து மீண்டு தற்போது தமிழகம் எழுச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. தமிழக முதல்வர் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். தமிழகம் தலைசிறந்த மாநிலமாக மாறும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை, நான் ராணுவ வீரனாக இருந்திருக்கிறேன். பல மாநிலங்களுக்கு சென்று இருக்கிறேன். தமிழகம் போன்ற சிறந்த மாநிலம் எதுவுமில்லை. இது காமராஜர் போட்ட விதை எனக் குறிப்பிட்டார்.
மேலும் காங்கிரஸ் கட்சியின் சிஸ்டம் பெர்ஃபெக்ட்டாக உள்ளது. கட்சியில் எந்த நெருக்கடியும் இல்லை என்றும், செல்வபெருந்தகை எம்.எல்.ஏவுக்கும் இந்த விவகாரத்திற்கு எந்த தொடர்பும் கிடையாது. அவர்மீது குற்றசாட்டை சுமத்தவே இது போன்ற பேச்சுக்கள் எழுகிறது. காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் பின்பற்றப்படுவதால் உடனுக்குடன் தீர்வு கிடைக்கிறது. தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சனையும் இல்லை தொகுதி மக்களுக்கு தொந்தரவு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே நேற்றைய தினம் வருத்தம் ஏற்பட்டது.
செல்வபெருந்தகை எம்.எல்.ஏவுக்கும் இந்த விவகாரத்திற்கு எந்த தொடர்பும் கிடையாது. அவர்மீது குற்றசாட்டை சுமத்தவே இது போன்ற பேச்சுக்கள் எழுகிறது. ஜனநாயகம் காங்கிரஸ் கட்சியில் இருப்பதால் தான் உடனுக்குடன் தீர்வு கிடைக்கிறது. எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சனையும் இல்லை தொகுதி மக்களுக்கு தொந்தரவு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே நேற்றைய தினம் வருத்தம் ஏற்பட்டது” என்றார்.