RSS Rally: சேலத்தில் ஆர்எஸ்எஸ் சீருடை அணிவகுப்பு பேரணி
ஆர்எஸ்எஸ் பேரணிக்காக 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தமிழ்நாடு முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகர் மரவனேரி பகுதியில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் தொடங்கிய பேரணியினை வடதமிழகம் மாநில செயற்குழு உறுப்பினர் விவேகானந்தர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்தப் பேரணியில் சீருடை அணிந்த ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த பேரணி மரவனேரி ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு, அம்பேத்கர் சிலை, ரோட்டரி ஹால், காந்தி ஸ்டேடியம் ரோடு, தமிழ் சங்கம் ரோடு, ராஜிவ் காந்தி ரோடு, சங்கர் நகர் மெயி்ன் ரோடு, உடயப்ப காலனி மெயின் ரோடு, அம்பேத்கர் சிலை வழியாக சென்று மீண்டும் ஆர்எஸ்எஸ் அலுவலகம் வந்தடைந்தது.
இந்த ஆர்எஸ்எஸ் பேரணி செல்லும் சாலைகள் முழுவதும் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது. ஆர்எஸ்எஸ் பேரணியை முன்னிட்டு சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி தலைமையில் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்தப் பேரணியில் பேண்ட் வாத்தியங்கள், புல்லாங்குழல் முழங்க ஒரே சீராக ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அணிவகுத்து நடந்தனர். ஆர்எஸ்எஸ் பேரணியில் அணிவகுத்து நடந்து வந்தவர்கள் மீது சிறுவர்கள் மற்றும் பெண்கள் மலர்களை தூவி வரவேற்பு அளித்தனர். இந்த பேரணியில் சாதாரண கூலித் தொழிலாளர்கள், மாணவர்கள், உயர் பதவியில் இருப்பவர்கள், தொழிற்சாலை மற்றும் அலுவலகத்தில் புரியவர்கள் என பலதரப்பட்ட பிரிவுகளை சேர்ந்த ஆர்எஸ்எஸ் சங்கத்தில் நன்கு பயிற்சி பெற்றவர் அணிவகுப்பில் பங்கேற்றனர்.
இதேபோன்று சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த வாழப்பாடி பகுதியில் ஆர்எஸ்எஸ் சீருடை பேரணி நடைபெற்றது. இதில் சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர் எஸ் எஸ் பேரணியில் கலந்து கொண்டனர். ஆர் எஸ் எஸ் பேரணி நடைபெறுவதை முன்னிட்டு வாழப்பாடி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாழப்பாடியில் உள்ள முக்கிய சாலைகள் வழியாக சென்ற ஆர்எஸ்எஸ் சீருடை ஊர்வலத்தை திரளான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.