DGE: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தம்; அவகாசத்தை நீட்டித்து தேர்வுத்துறை உத்தரவு
பொதுத் தேர்வு எழுதவுள்ள 10, 11ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள அவகாசத்தை நீட்டித்து அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
பொதுத் தேர்வு எழுதவுள்ள 10, 11ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள அவகாசத்தை நீட்டித்து அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
நடப்பு கல்வியாண்டுக்கான 10, 11 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட உள்ளன. அதற்கான மாணவர்கள் பெயர்ப் பட்டியல் தயாரிக்கும் பணி, அரசின் எமிஸ் செயலி வழியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் எமிஸ் தளத்தில் தங்கள் மாணவ, மாணவிகளின் விவரங்களை சரிபார்த்து, நவம்பர் 30-ம் தேதிக்குள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. எனினும் இப்பணிகளை முடிக்க சில பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூடுதல் அவகாசம் கேட்டதை அடுத்து, கால அவகாசம் டிசம்பர் 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''2022- 2023 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் தொடர்பான பள்ளி மாணவர்களுக்கான பெயர்ப் பட்டியல் தயாரிக்கும் பொருட்டு, அனைத்து உயர்நிலை , மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியர்களும் 14.11.2022 முதல் 30.11.2022 வரையிலான நாட்களில் எமிஸ் தளத்தில் தங்கள் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு மாணவர்களின் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து, திருத்தங்களை மேற்கொள்ளுமாறு பார்வையில் காணும் செயல்முறைகள் வாயிலாக அறிவுறுத்தப்பட்டது.
தற்போது சில பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மேற்குறிப்பிட்ட பணியினை மேற்கொள்வதற்கு கூடுதல் கால அவகாசம் கோரியதால், எமிஸ் தளத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை சரிபார்த்து திருத்தங்கள் செய்யும் பணியினை மேற்கொள்ள 12.12.2022 வரை கூடுதலாக கால அவகாசம் வழங்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட பணிகளை எமிஸ் தளத்தில் மேற்கொள்ள இதுவே கடைசி வாய்ப்பாகும்.
எனவே, முதன்மைக் கல்வி அலுவலர்கள், தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து உயர்நிலை , மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் மேற்குறிப்பிட்ட விவரத்தினைத் தெரிவித்து, எமிஸ் தளத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு மாணவர்களின் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து, திருத்தங்களை மேற்கொள்ளும் பணியினை 12.12.2022- க்குள் நிறைவு செய்வதற்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், மேற்குறிப்பிட்டவாறு பதிவேற்றம் செய்த மாணவர்களின் விவரங்களின் அடிப்படையில் இடைநிலை மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான பெயர்ப் பட்டியல் பட்டியல் தயாரித்தல் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்துதல் போன்ற பணிகளை அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் மேற்கொள்வதற்கான தேதிகள் குறித்த விவரம் பின்னர் தெரிவிக்கப்படும்''.
இவ்வாறு அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.