ரெம்டெசிவர் தட்டுப்பாட்டிற்கு மத்திய அரசே காரணம் : சுகாதாரத்துறை செயலர் குற்றச்சாட்டு
தமிழகத்தில் ரெம்டெசிவர் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு மாநிலத்திற்கு போதுமான அளவு மருந்துகளை வழங்காததே இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழ காரணம் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
தமிழகத்தில் ரெம்டெசிவர் மருந்து தட்டுப்பாடு என்ற புகார் எழ மத்திய அரசே காரணம் என தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்
ரெம்டெசிவர் தட்டுப்பாடு குறித்து ABP நாடு செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ‛‛நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மத்திய அரசு ரெம்டெசிவர் மருந்துகளை மாநிலங்களுக்கு விநியோகிப்பதில்லை என்றும், ஒரு பொதுவான கணக்கீட்டின்படி கொடுப்பதால் இதுபோன்ற பற்றாக்குறை ஏற்படுகிறது,’’ என்றும் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் போதுமான அளவு ரெம்டெசிவர் மருந்துகள் இருப்பதாகவும், கொரோனா தொற்று கண்டறியப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் அனைவருக்கும் ரெம்டெசிவர் மருந்து வழங்கப்படுவதால் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ள ராதாகிருஷ்ணன், கொரோனா தொற்று தீவிரம் அல்லாத நபர்களுக்கு ரெம்டெசிவர் மருந்து வழங்கப்பட வேண்டிய தேவையில்லை என்றும், அந்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
ரெம்டெசிவீர் மருந்துகளை நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தமிழகத்திற்கு தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளதாகவும், மத்திய அரசு போதுமான அளவு மருந்துகளை தரும் பட்சத்தில் தனியார் மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள இந்த செயற்கை பற்றாக்குறையை தவிர்க்கலாம் என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு தரப்படவேண்டிய ரெம்டெசிவீர் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அந்த மருந்திற்காக பல மாவட்டங்களில் இருந்து நோயாளிகளின் உறவினர்கள் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மருந்தை பெற கடந்த சில நாட்களாக படையெடுத்து வந்தவண்ணம் உள்ள நிலையிலும், அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு மருந்துகள் விநியோகம் செய்யப்படுகிறது. பலர் காலையில் இருந்து கீழ்பாக்கத்தில் நீண்ட வரிசையில் நின்றாலும் பலருக்கு டோக்கன் கிடைக்காமல் ரெம்டெசிவர் மருந்து வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் ராதாகிருஷ்ணன் இந்த பதிலை அளித்துள்ளார்.
ஆனால், இன்று முதல் டோக்கன் இல்லாதவர்களுக்கும் மருந்துகள் விற்பனை செய்யப்படும் என்றும், காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை மருந்துகள் விநியோகிக்கப்படும் என்று தெரிவித்துள்ள மருத்துவமனை நிர்வாகம், மாலை 5 மணிக்கு பிறகு டோக்கன் வைத்திருப்பவர்கள் அடுத்த நாள் மருந்துகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர். அதோடு ஒரு நபருக்கு ஒரு மருந்து என்ற கணக்கில் மட்டுமே ரெம்டெசிவர் தரப்படும் என்றும், நேரடியாக கையில் பணத்தை கொடுத்து மருந்துகளை பெற்றுக்கொள்வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு இடங்களில் மருந்து தட்டுப்பாடு காரணமாக அதிகவிலைக்கு வாங்க வேண்டிய சூழலில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 1,568 ரூபாய்க்கு ரெம்டெசிவர் விற்கப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் ஆதார் எண், சிடி ஸ்கேன் விவரம், மருத்துவர் சான்றிதழ் மற்றும் மருந்து வாங்க வந்திருப்பவரின் ஆதார் எண் ஆகியவற்றை வழங்குவோருக்கு ரெம்டெசிவர் விற்பனை செய்யப்படுகிறது