தமிழ்நாட்டில் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு.. கண்ணீரிலும், பதற்றத்திலும் காத்திருக்கும் மக்கள்..
தமிழ்நாட்டில் ரெம்டெசிவிர் மருந்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இதை வாங்க மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கவேண்டிய சூழலில் உருவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக சென்னை, மதுரை, கோவை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் வேகமாக உள்ளது. இங்குள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க படுக்கை இல்லாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் நோயாளிகள் சிலர் ஆம்புலன்ஸ்களில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் தற்போது ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை,கோவை, திருச்சி,மதுரை,திருநெல்வேலி மற்றும் சேலம் ஆகிய இடங்களில் தற்போது ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விற்பனை செய்யப்படும் அனைத்து இடங்களிலும் மக்கள் மருத்துக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இதுதொடர்பாக ஒருவர் இந்தியா டூடே தளத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில்,"என்னுடைய உறவினர் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார். அவரை சேர்த்துள்ள மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து 25 ஆயிரம் ரூபாய் ஆக உள்ளது. ஆனால் தமிழ்நாடு அரசால் விற்பனை செய்யப்படும் இடத்தில் 6 டோஸ் ரெம்டெசிவிர் 9400 ரூபாய் ஆக உள்ளது. இதன் காரணமாக அரசின் இடத்திற்கு வாங்க வந்தேன். எனினும் இங்கு நீண்ட கூட்டம் இருப்பதால் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அத்துடன் ரெம்டெசிவிர் தட்டுப்பாடு காரணமாக ஒருநாளைக்கு 50 பேருக்கு மட்டும் இந்த மருந்து வழங்கப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் அரசு ரெம்டெசிவிர் விற்பனை மையங்களுக்கு வாங்க வருவோர் நோயாளியின் விவரங்கள் மற்றும் மருத்துவர் கொடுத்த சீட்டு, நோயாளி மற்றும் வாங்க வருவோரின் ஆதார் கார்டு ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும். அரசு விற்பனை மையங்களில் தினமும் காலை 10 மணி முதல் 4 மணி வரை தற்போது ரெம்டெசிவிர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டிற்கு ஒருநாளைக்கு 7000 ரெம்டெசிவிர் மருந்துகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த அளவு பற்றாது என்பதால் முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இடம் இதை 20,000 ஆக அதிகரிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ்நாட்டிற்கு இதுவரை 2.05 லட்சம் ரெம்டெசிவிர் டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.