சென்னையில் 40-70 வயதுக்கு உட்பட்டவர்களில் குறைந்த கொரோனா.. தடுப்பூசி புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?
20 முதல் 39 வயதுடையவர்களில் கொரோனா பாதிப்பு 3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 40 வயதுக்கு மேற்பட்டவர்களில் கணிசமாகவே பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி- மார்ச் மாதங்களில் 2 சதவிகிதத்துக்கும் குறைவாகவே இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு மார்ச் இரண்டாவது மற்றும் மூன்றாவது வாரங்களில் கிடுகிடுவென உயரத்தொடங்கியது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் மாநிலத்தில் சராசரியாக நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்கள். அரசு மக்களிடையே கொரோனா பரிசோதனையைத் தீவிரமாக்கி வரும் நிலையில் நாளொன்றுக்கான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பத்தாயிரத்தைக் கடந்துள்ளது.
ஒருவாரத்தில் மட்டும் சென்னையில் 40000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒருநாளில் மட்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்களில் 23.8 சதவிகிதம் பேருக்குக் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த சதவிகிதம் மேலும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இத்தனை எண்களும் அச்சமூட்டுவதாகவே இருந்தாலும் அதில் சில ஆசுவாசப்படுத்திக்கொள்ளக் கூடிய தரவுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. உதாரணத்துக்குக் 40-79 வயதுள்ளவர்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கைக் கணிசமாகக் குறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தடுப்பூசி போடப்பட்டதன் தாக்கமாக இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. அண்மையில் சென்னை மாநகராட்சி வெளியிட்ட கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறித்த தரவுகளைத் தொகுத்து இந்தப் புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளார் கொரோனா தரவுகள் ஆராய்ச்சியாளர் விஜயானந்த்.
#Chennai comparison of age group of covid affected people during 1st Wave vs 2nd Wave.
— Vijayanand - Covid Data Analyst (@vijay27anand) April 21, 2021
1) 6-Jul-20 & 18-Apr-21 had similar active case of 25K
2) Age group of 20 to 39 has significant increase by 3%
3) Age group 40-79 shows a decline .
6/8 pic.twitter.com/lL6Keeryk4
மாநகராட்சியின் புள்ளிவிவரங்களைக் கொண்டு கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலையில் வயது வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆராயப்பட்டுள்ளது. இதன்படி 20 முதல் 39 வயதுடையவர்களில் கொரோனா பாதிப்பு 3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 40 வயதுக்கு மேற்பட்டவர்களில் கணிசமாகவே பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும் முதல் அலைக் காலகட்டமான ஜூலை 2020 மற்றும் இரண்டாம் அலைக் காலகட்டமான ஏப்ரல் 2021ன் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 25000 என்கிற சராசரியிலேயே இருந்து வருகிறது.
ஒருவாரத்தில் மட்டும் சென்னையில் 40000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக் குறைந்திருப்பது தடுப்பூசி செலுத்துதல் தொடர்பான அரசின் தொடர்ச்சியான வலியுறுத்தல் காரணமாக இருக்கலாம் என விஜயானந்த் தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசி செலுத்துவதால் தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளதா?
தடுப்பூசி போட்டுக்கொள்வதால் தொற்று எண்ணிக்கைக் குறைகிறதா என்பதைக் கண்டறிய மேற்கொள்ளப்பட்ட சர்வதேச ஆய்வுகள் நம்பிக்கை தரக்கூடிய வகையில் இருக்கின்றன. உதாரணத்துக்கு அமெரிக்காவில் முதல்கட்டமாக மக்களுக்குச் செலுத்தப்பட்ட மாடர்னா கொரோனா தடுப்பூசிகளால் மூன்று இரண்டு பங்கு வரை தொற்று கட்டுப்படுத்தப்பட்டதாக பாஸ்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளார்கள். ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட ஐரோப்பிய மக்களிடையே தொற்று 49.3 சதவிகிதம் வரைக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. தற்போது புதிய தடுப்பூசிக் கொள்கையின்படி இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், மேலே குறிப்பிட்ட தரவுகளுடன் ஒப்பிடும்போது பாதிப்பு எண்ணிக்கை கணிசமாகவே கட்டுப்படுத்தப்படும் என்கிற நம்பிக்கையை அளிக்கிறது.