திருப்பத்தூர் அருகே பரபரப்பு! 10 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் கடத்தல்! போலீஸ் வலைவீச்சு
ஆந்திர மாநிலத்தில் இருந்து அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 14 செம்மரக்கட்டைகளை ஒரு ஷிப்ட் டிசையர் காரில் கடத்தி வந்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே ஆந்திர மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் போலீசாராலும் வனத்துறையினராலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
எப்படி நடந்தது சம்பவம்?
ஆந்திர மாநிலத்தில் இருந்து அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 14 செம்மரக்கட்டைகளை ஒரு ஷிப்ட் டிசையர் காரில் கடத்தி வந்துள்ளனர். குற்றவாளிகள் அதிக வேகத்தில் காரை ஓட்டிக்கொண்டு திருப்பத்தூர் மாவட்டத்துக்குள் நுழைந்துள்ளனர். இந்த அதிவேக பயணத்தின்போது, காரில் ஏற்றி வந்த செம்மரக்கட்டைகளுடன் அந்தக் கார், நாட்றம்பள்ளி அருகே புதுப்பேட்டை பகுதியில் எதிரே வந்த மற்றொரு காரை மோதியது.
மோதிய காரின் உரிமையாளர் உடனே சந்தேகத்தின் அடிப்படையில் அந்த மரக்கட்டைகள் ஏற்றி வந்த காரை பின் தொடர்ந்து சென்றுள்ளார். பின்னர் அந்தக் கார், கதிரிமங்கலம் அருகே எம்ஜிஆர் நகர் பகுதிக்குள் நுழைந்ததும் அங்கு நின்றிருந்த ஜேசிபி இயந்திரத்தின் மீது மோதி கார் நின்றது.
5 பேர் தப்பியோடினர்
கார் நின்றதும் அதில் இருந்த 5 மர்ம நபர்கள் உடனே காரை விட்டு கைவிடாது தப்பி ஓடினர். அவர்களை தேடும் பணியில் போலீசார் தேடும் பணியில் களமிறங்கியுள்ளனர்
போலீசாருக்கும் வனத்துறைக்கும் தகவல்
அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இந்த விவரத்தை திருப்பத்தூர் மாவட்ட போலீசாருக்கு தகவலளித்தனர். போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரை சோதனையிட்டனர். சோதனையில் 14 செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது.
பின்னர் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், அந்த 14 செம்மரக்கட்டைகளையும் காரையும் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு சுமார் பத்து லட்சம் ரூபாய் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தப்பியோடிய மர்ம நபர்களைத் தேடும் போலீசார்
தப்பியோடிய 5 மர்ம நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவர்களின் அடையாளங்களை உறுதி செய்யும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.






















