2000 வழங்கும் உத்தரவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்- ரவிக்குமார் எம்.பி கோரிக்கை
கொரோனா நிவாரண தொகையாக 2000 வழங்கும் உத்தரவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என விசிக எம்.பி.ரவிக்குமார் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்
திமுக ஆட்சிக்கு வந்தால் கொரோனா நிவாரத் தொகையாக பொதுமக்களுக்கு 4000 ரூபாய் வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தார். இந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் வழங்குவதற்கான கோப்பில் ஸ்டாலின் தனது முதல் கையெழுத்தை இட்டிருந்தார். கொரோனா பரவல் விகிதம் தமிழகத்தில் அதிகரித்திருந்த நிலையில் ஊரடங்கை அறிவித்த திமுக அரசு. கொரோனா நிவாரணத் தொகையாக அறிவித்த 4000 ரூபாயை இரண்டு தவணையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என அறிவித்தது.
தமிழகத்தில் உள்ள 2 கோடியே 7 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல்தவணையாக கடந்த மே மாதம் 2000 ரூபாய் முழுமையாக வழங்கப்பட்டது. தனிமனித இடைவெளியையும் கொரோனா கட்டுப்பாடுகளையும் பின்பற்றி நியாயவிலை கடைகளில் 2000 ரூபாயை மக்கள் வாங்கி சென்றனர். இரண்டாம் தவணையாக 2000 ரூபாயும்14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். குடும்ப அட்டைதார்களுக்கு இரண்டாம் தவணையாக ரூபாய் 2000 தருவதற்கான டோகன்கள் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், ஜூன் 15 ஆம் தேதி முதல் இரண்டாம் தவணையாக 2000 ரூபாய் மற்றும் 14 வகையான மளிகை பொருட்களை நியாயவிலை கடைகளில் பொது மக்கள் பெற்றுகொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் அர.சக்ரபாணி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்குவதற்கான உத்தரவை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளருமான ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக ரவிக்குமார் எம்.பி பதிவிட்டுள்ள முகநூல்பதிவில் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் வருமானத்தை இழந்து வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ள ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களை மீட்பதற்கு நேரடியாக அவர்கள் கையில் உதவித்தொகையை வழங்குவதே சிறந்தது எனப் பொருளாதார வல்லுநர்கள் கூறிவருகின்றனர். அதற்கேற்ப ஆட்சிப் பொறுப்பேற்றதும் மே, ஜூன் மாதங்களில் மாதம் 2 ஆயிரம் என 4 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். வாழ்வாதாரம் இழந்தோருக்கு அது பேருதவியாக உள்ளது. இன்னும் கொரோனா பேராபத்து விலகாத நிலையில் அந்தத் திட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கவேண்டும் என வேண்டுகிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தனது பதிவில் கூறியுள்ளார்.