Raj Bhavan Guest House: ஏழை மாணவிக்காகத் திறக்கப்பட்ட விவிஐபிகளுக்கான ஆளுநர் விருந்தினர் மாளிகை: அதிசயத்தின் பின்னணி என்ன?
நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்காக மட்டுமே திறக்கப்படும் ராஜ்பவன் விருந்தினர் மாளிகை, முதல் முறையாக ஓர் ஏழை மாணவியின் குடும்பம் தங்குவதற்காகத் திறக்கப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியக் குடியரசுத் தலைவர், பிரதமர் போன்ற நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்காக மட்டுமே திறக்கப்படும் ராஜ்பவன் விருந்தினர் மாளிகை, முதல் முறையாக ஓர் ஏழை மாணவியின் குடும்பம் தங்குவதற்காகத் திறக்கப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாநிலக் கல்வி வாரியத்தின் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியாகின. இதில் 94.03 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். வழக்கம்போல மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றனர். வரலாற்றில் முதல் முறையாக, 600-க்கு 600 மதிப்பெண்களை மாணவி நந்தினி பெற்றார்.
இந்த நிலையில் இன்று பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் அனைவரையும் அழைத்து அவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஆளுநர் ஆர்.என். ரவி நடத்தினார்.
ஆளுநர் மாளிகையில் நடந்த இந்த நிகழ்ச்சிக்காக தென்காசி மாவட்டம் கடையநல்லுாரில் இருந்து மாணவி ஷப்ரீன் இமானா பெற்றோருடன் சென்னை வந்தார். அவர், குடியரசுத் தலைவர், பிரதமர் போன்ற மிக முக்கியப் பிரமுகர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டுள்ள விருந்தினர் மாளிகையில் தங்க வைக்குமாறு ஆளுநர் உத்தரவிட்டார்.
விதிமுறைப்படி இங்கே தனி நபர்கள் தங்குவதற்கு அனுமதியில்லை என்று ஆளுநர் மாளிகை அதிகாரிகள், ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.
விதிமுறைகளை தளர்த்துவதில் தவறே இல்லை
எனினும் அவர்களிடம், ’மாநில அளவில் பிளஸ் 2 தேர்வில் ரேங்க் பெற்ற மாணவி. ஏழை கூலித் தொழிலாளியின் குடும்பம். தமிழ் வழியில் கல்வியில் பயின்று சாதனை படைத்துள்ளார். அவருக்காக விதிமுறைகளை தளர்த்துவதில் தவறே இல்லை’ என்று ஆளுநர் உறுதிபடத் தெரிவித்தபிறகே, மாணவி ஷப்ரீன் இமானா குடும்பத்துக்காக ஆளுநர் மாளிகையில் உள்ள விருந்தினர் மாளிகை திறக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கடையநல்லுார் ஹிதாயத்துல் இஸ்லாம் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆமீன் கூறியதாவது:
’’மாணவி ஷப்ரீன் இமானா, எங்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று பிளஸ் டூ தேர்வில் 600க்கு 590 மார்க் பெற்றுள்ளார்.
தமிழ் வழியில் கல்வி பயின்று மாநில அளவில் முதலிடமும், ஒட்டு மொத்த அளவில் மாநிலத்தில் 3ம் இடமும் பெற்றுள்ளார். தென்காசி மாவட்டத்தில் தமிழ் வழியில் முதல் ரேங்க் பெற்றுள்ளதுடன், பர்ஸ்ட் குரூப்பில் பயின்று முதல் இடம் பெற்றவர் இவரே. இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் தலா 100 மார்க், கணிதத்தில் 99, ஆங்கிலத்தில் 96, தமிழில் 95 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
ஆளுநர் மாளிகையில் இருந்து, நேற்று (9ஆம் தேதி) பிற்பகலில், ஆளுநருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு மாணவி ஷப்ரீன் இமானாவை பெற்றோருடன் சேர்ந்து சென்னைக்கு அனுப்பி வையுங்கள் என்று தகவல் வந்தது.
போக்குவரத்து செலவை ஏற்றுக்கொண்ட ஆளுநர் மாளிகை
ஏழ்மையான குடும்பம். கூலித் தொழிலாளியான அவரை எப்படி உடனடியாக சென்னைக்கு அனுப்பி வைப்பது என்று நாங்கள் யோசிப்பதற்கு முன்பே, மாணவியின் போக்குவரத்து செலவை ஆளுநர் மாளிகையே ஏற்றுக் கொள்ளும். நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்றனர். உடனே கார் பிடித்து மாலை 6 மணிக்கு அனுப்பி வைத்தோம்.
மாணவியின் தந்தை சிந்தாமதார் கூலித் தொழிலாளி. முதுகெலும்பு பிரச்னையால் வீட்டில் படுக்கையில் உள்ளார். எனவே மாணவியுடன் அவரது தாய் சிராஜினிகா, மாமா அகமது அப்சல் ஆகியோர் காரில் இன்று (10ம் தேதி) காலை 7 மணிக்கு ஆளுநர் மாளிகை வந்து சேர்ந்தனர். அங்கேயே அவர்கள் தங்கி, தயாராக அறை ஒதுக்கப்பட்டது. இது பெருமையாக உள்ளது’’.
இவ்வாறு தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.