திருப்பதிக்கே டப் கொடுத்த காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்.. கோயிலில் குவியும் பக்தர்கள்..
புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் சுவாமி தரிசனம் செய்ய காலையிலேயே குவிந்த பக்தர்கள் கூட்டம்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வைணவ திருக்கோவில்களுக்கு இலவசமாக அழைத்துச் செல்லப்படும், 60 வயதிற்கும் மேற்பட்ட பக்தர்களும், போக்குவரத்து துறை சார்பில் ஆன்மீக சுற்றுலா செல்லும் பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தனர்.
புரட்டாசி சனிக்கிழமை - Puratasi
காக்கும் கடவுள் விஷ்ணு பகவானான பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதம் முழுவதும் இந்துக்கள் அனைவரும் விரதம் இருந்து ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் பெருமாளை சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். அதன்படி புரட்டாசி மாதம் துவங்கி 3-வது சனிக்கிழமை இன்று கொண்டப்படுவதை ஒட்டி வைணவ திவ்ய தேசங்களில் பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான உலகப் பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமை ஒட்டி பெருமாளை தரிசனம் செய்வதற்காக உள்ளூர் வெளியூர் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவித்து வருகின்றனர்.
சிறப்பு அலங்காரங்கள்
புரட்டாசி மாதத்தில் 3வது சனிக்கிழமையை ஒட்டி காலையிலேயே வரதராஜ பெருமாளுக்கும்,பெருந்தேவி தாயாருக்கும், மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரங்கள் செய்து சிறப்பு வழிபாடு நடத்தி பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய நடை திறக்கப்பட்டுள்ளது
காலை நேரத்திலேயே அதிக அளவில் பக்தர்கள் வந்துள்ளதை தொடர்ந்து நீண்ட வரிசையில், ஒரு மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து, பெருந்தேவி தாயாரையும், அத்திகிரி மலையில் உள்ள வரதராஜ பெருமாளையும் கோவிந்தா, கோவிந்தா என மனமுருக கோஷமிட்டு சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு வருகின்றனர்.
கோயிலில் குவிந்த பக்தர்கள்
மேலும் தமிழ்நாடு அரசின் உத்தரவின் படி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வைணவ திருக்கோவில்களுக்கு இலவசமாக அழைத்துச் செல்லப்படும், 60 வயதிற்கும் மேற்பட்ட பக்தர்களும், போக்குவரத்து கழகம் சார்பில் ஆன்மீக சுற்றுலா செல்லும் பக்தர்களும் காலை நேரத்திலேயே அழைத்து வரப்பட்டு பெருமாளை தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புரட்டாசி மாதத்தின் 3-வது சனிக்கிழமையை ஒட்டி சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வந்துள்ளதால் கோவில் வளாகமே களைகட்டி உள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜன் பெருமாள் கோயில் ( Kanchipuram Varadharaja Perumal Temple)
வைணவத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய கோயில்களுக்கு அடுத்ததாக சிறப்பு வாய்ந்த கோயிலாக பார்க்கப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில், 31 வது திவ்யதேசம் கோயிலாக உள்ளது. இக்கோயிலின் மூலவராக , தேவராஜ பெருமாள் - தாயார் சன்னதியில் பெருந்தேவி தாயார் ஆகியோர் காட்சியளிக்கின்றனர். உற்சவராக பேரருளாளன் உள்ளார்.
அத்திகிரி
வரதராஜ பெருமாள் கோயில் சன்னதி அமைந்துள்ள இடம் அத்திகிரி என அழைக்கப்படுகிறது. மலை மீது காட்சி தருவதால் மூலவருக்கு மலையாளன் பெயரும் உண்டு. மூலவர் மலை மீது அமைந்துள்ளார் என்பதற்கு சான்றாக கர்பகிரகத்தின் நேர் கீழே குன்று குடைவரை கோவிலில் நரசிங்க பெருமாள் வீற்றுக்கிறார்.
நின்ற கோளத்தில் காட்சியளிக்கும் வரதராஜ பெருமாளை தரிசிக்க வேண்டும் 24 படிகள் ஏறி செல்ல வேண்டும். தமிழ்நாட்டில் பிற வைணவ கோயில்களில், எங்கும் காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார் திருமேனி காட்சி தருகின்றது. இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிப்பது கூடுதல் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.