"Life-அ தொலச்சிட்டியே பா' ஜாமீனில் வெளிவர முடியாது அளவிற்கு FIR ; 44 மாணவர்கள் நிலை என்னவாகும்?
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர போலி NRI சான்றிதழ் வழங்கிய பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
புதுச்சேரி: எம்பிபிஎஸ், பிடிஎஸ் உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர போலி NRI சான்றிதழ் வழங்கிய 44 மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு புதுச்சேரி காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
என்ஆர்ஐ ஸ்பான்சர் ஒதுக்கீட்டில் போலி சான்றிதழ்
புதுச்சேரியில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு சென்டாக் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில் என்ஆர்ஐ NRI (வெளிநாடு வாழ் இந்தியர்) ஒதுக்கீட்டில் 116 இடங்கள் உள்ளன. இதில் முதல், 2ம் கட்ட கலந்தாய்வில் 37 மாணவர்கள் சேர்ந்தனர். அப்போது NRI என்ஆர்ஐ ஸ்பான்சர் ஒதுக்கீட்டில் போலி சான்றிதழ் அளித்து மாணவர்கள் சேர்வதாக புகார் எழுந்தது. இந்த நிலையில், மீதமுள்ள 79 இடங்களுக்கு 134 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்த மாணவர்களின் சான்றிதழ்களை சென்டாக் நிர்வாகம் சரிபார்த்தது. இதில் 44 பேரின் என்ஆர்ஐ ஸ்பான்சர் சான்றிதழ் போலியானது என தெரியவந்தது.
'போலி ஆவணங்கள் தயாரித்தல், போலி ஆவணங்களை உண்மை என சமர்பித்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு'
இதனையடுத்து, மாணவர்களின் சான்றிதழ்களை வெளிநாட்டு தூதரகம் அனுப்பி சென்டாக் நிர்வாகம் விசாரணை மேற்கொண்டது. இதில் 44 மாணவர்கள் போலி சான்றிதழ் வழங்கியது கண்டறியப்பட்டது. இதை வெளிநாட்டு தூதரகங்கள் உறுதி செய்தது. இது தொடர்பாக லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் சென்டாக் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் 44 மாணவர்கள் மீதும் லாஸ்பேட்டை காவல் துறையினர் போலி ஆவணங்கள் தயாரித்தல், போலி ஆவணங்களை உண்மை என சமர்பித்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், சிக்கிய மாணவர்கள் டெல்லி, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், அந்தமான் நிகோபார் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள். இவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. மாணவர்கள் என்பதால் அவர்கள் மீது உடனடியாக கைது நடவடிக்கையை காவல் துறை எடுக்கவில்லை.
மாணவர்கள் நேரடியாக இந்த தவறை செய்திருக்க வாய்ப்பில்லை
இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவிக்கையில்... வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள 44 மாணவர்கள், பெற்றோர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளோம். இந்த விசாரணையில் யார் மூலமாக போலி சான்றிதழ் பெற்றார்கள், அவர்களுக்கு புரோக்கர்களாக செயல்பட்டவர்கள் யார் என விசாரணை மேற்கொள்ளப்படும், மாணவர்கள் நேரடியாக இந்த தவறை செய்திருக்க வாய்ப்பில்லை என்பதாலும், பெற்றோர்கள் தான் யாரையாவது அணுகி இருக்க வேண்டும் என்ற ரீதியில் விசாரணையை துவக்கியுள்ளோம். பெற்றோர்கள் தரும் தகவல்கள் அடிப்படையில் ஏஜெண்டுகளை கைது செய்து விசாரணை மேற்கொள்வோம் என தெரிவித்தார்.
இடஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களின் சான்றிதழ்களையும் அரசு ஆய்வு செய்ய வேண்டும்
இதனிடையே முதல், 2ம் கட்ட கலந்தாய்வில் என்ஆர்ஐ இடஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களின் சான்றிதழ்களையும் அரசு ஆய்வு செய்ய வேண்டும் என பெற்றோர்கள், மாணவர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். அதிலும் போலிச் சான்றிதழ்கள் வழங்கியிருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.
சி.பி.ஐ., விசாரணை வேண்டும் - அதிமுக அன்பழகன்
என்.ஆர்.ஐ., சீட்டு ஒதுக்கீடு தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும் என அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
சென்டாக் கலந்தாய்வில் போலி சான்றிதழ் கொடுத்து சேர்ந்துள்ளனர். ஆனால் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட மாணவர்களின் சான்றிதழ்களையும் அரசு பரிசீலினை செய்யாமல் மூடி மறைக்கிறது. இது அகில இந்திய அளவில் மாநிலத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய தலைக்குனிவாகும். மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வில் அதிகப்படியான மதிப்பெண்கள் எடுத்த புதுச்சேரி மாணவர்களின் இடங்களை விஞ்ஞான ரீதியில் முறைகேடாக என்.ஆர்.ஐ., கோட்டாவின் மூலம் தொடர்ந்து அபகரித்து வருகின்றனர். இது குறித்து கவர்னர் சி.பி.ஐ., விசாரணைக்கு கொண்டு வரவேண்டும்.
முறைகேட்டில் ஈடுபட்டு வரும் நவீன கல்வி குற்றவாளிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்கி சட்ட ரீதியான நடவடிக்கைக்கு அவர்களை உட்படுத்த வேண்டும். இந்த முறைகேட்டில் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திற்கு தொடர்பு இருந்தால் அந்த கல்லூரியின் அனுமதியை ரத்த செய்ய தேசிய மருத்துவ ஆணையத்திற்கு பரிந்துரைக்க வேண்டும். இது சம்பந்தமாக கவர்னரை நேரில் சந்தித்து அ.தி.மு.க., சார்பில் புகார் கடிதம் அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.