அதிக பாரத்துடன் செல்லும் நூற்றுக்கணக்கான மணல் லாரிகளால் - கரூரில் பொதுமக்கள் அவதி
நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகள் காவிரி ஆற்றில் இருந்து மணல் எடுத்துச் சென்று வருகிறது. அதிக பாரத்துடன் சென்று வரும் மணல் லாரியால் பொது மக்கள், வியாபாரிகள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.
கரூர் அருகே அதிக பாரத்துடன் செல்லும் நூற்றுக்கணக்கான மணல் லாரிகளால் பெரியவர்கள் முதல் பள்ளிக் குழந்தைகள் வரை சாலையில் அச்சத்துடன் சென்று வருவதாக காவல் நிலையத்தில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
காவிரி ஆற்றில் பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் எடுக்கப்பட்டு வாங்கல் வழியாக எடுத்து செல்லும் லாரிகள் ஆற்று மணலை ஸ்டாக் பாயிண்டில் நிரப்பி வைத்து, அங்கிருந்து லாரிகள் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு மணல் விற்பனைக்கு எடுத்து சென்று வருகின்றனர். 10க்கும் மேற்பட்ட குக்கிராமங்களின் பிரதான கிராமமாக வாங்கல் இருந்து வருகிறது. பொதுமக்கள் இங்கிருந்து அதிக அளவு பொருட்கள் வாங்கி செல்வதும், அதேபோல அரசு மருத்துவமனை, அரசு பள்ளி, காவல் நிலையம், கூட்டுறவு வங்கிகள் அமைந்துள்ள முக்கிய பகுதியாக வாங்கல் இருந்து வருகிறது. எனவே, வாங்கல் சாலை பிரதான வழித்தடமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகள் காவிரி ஆற்றில் இருந்து மணல் எடுத்துச் சென்று வருகிறது. அதிக பாரத்துடன் சென்று வரும் மணல் லாரியால் பொது மக்கள், வியாபாரிகள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். லாரிகள் கடைவீதி வழியாக செல்வதால், லாரியில் இருந்து மணல் கீழே விழுவதால் மாசு ஏற்படுவதோடு விபத்துகள் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த சாலையில் செல்ல அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
மாசு தொல்லையால் உடல் உபாதைகள் ஏற்படுகிறது. எனவே மணல் லாரிகள் வாங்கல் கடைவீதி வழியாக செல்வதை தடுத்து நிறுத்தி மாற்று பாதையில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாங்கல் காவல் நிலையத்தில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என திரளாக ஒன்று கூடி கோரிக்கை மனு அளித்தனர்.