பிரதமர் மோடி ராமநாதபுரம் வருகை: விடுதலையான தமிழக மீனவர்கள்
அவர்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்துவது போல, பிரதமர் மோடி ராமநாதபுரம் செல்லும் முன்பே 40 தமிழக மீனவர்களை இலங்கை அரசு இன்று விடுதலை செய்துள்ளது.
பிரதமர் மோடி ராமநாதபுரம் வருவதையொட்டி இலங்கை சிறையில் இருந்த 40 தமிழக மீனவர்கள் இன்று (ஜனவரி 20) விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த 40 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜனவரி 17-ஆம் தேதி கடிதம் எழுதினார்.
இந்தநிலையில் தான், நேற்று (ஜனவரி 19) சென்னை வந்த பிரதமர் மோடி கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று மோடி சாமி தரிசனம் செய்தார். மதியம் 12.45 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு 2.05 மணிக்கு பிரதமர் மோடி ராமேஸ்வரம் சென்றடைகிறார்.
மோடி ராமநாதபுரம் செல்லும் முன்பே இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்வதற்கு மத்திய அரசு தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதால், 40 மீனவர்கள் இன்றே தமிழகம் திரும்புவார்கள் என்று மீனவர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
அவர்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்துவது போல, பிரதமர் மோடி ராமநாதபுரம் செல்லும் முன்பே 40 தமிழக மீனவர்களை இலங்கை அரசு இன்று விடுதலை செய்துள்ளது.