President Visit: உச்சகட்ட பாதுகாப்பில் ஊட்டி! இன்று தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் - திட்டம் என்ன?
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நான்கு நாட்கள் பயணமாக இன்று தமிழ்நாடு வருகிறார். அவரது வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழ்நாட்டிற்கு வருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று தமிழ்நாட்டிற்கு வருகிறார். ஊட்டி, திருச்சி மற்றும் திருவாரூர் ஆகிய இடங்களில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகிறார்.
தமிழகம் வரும் குடியரசுத் தலைவர்:
குடியரசுத் தலைவர் திரளபதி முர்மு இன்று காலை 6.25 மணிக்கு டெல்லியில் உள்ள பாலம் விமானப்படை தளத்தில் இருந்து தனி விமானம் மூலமாக புறப்பட்டு கோவையில் உள்ள சூலூர் விமானப்படை தளத்திற்கு வருகிறார். சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக நீலகிரி மாவட்டத்திற்குச் செல்கிறார்.
நீலகிரி மாவட்டத்தில் குடியரசுத் தலைவர் வருகைக்காக உதகையில் ஹெலிகாப்டர் இறங்கும் தளம் தயார் நிலையில் உள்ளது. பலத்த பாதுகாப்பு வட்டத்திற்குள் ஊட்டியை காவல்துறையினரும், ராணுவத்தினரும் கொண்டு வந்துள்ளனர். ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி ஊட்டி ராஜ்பவனுக்குச் செல்கிறார்.
உச்சகட்ட பாதுகாப்பில் ஊட்டி:
குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டு கோவை, நீலகிரி மாவட்டத்தில் பல கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஊட்டியில் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் தங்குகிறார். ஊட்டி வெலிங்டனில் நாளை பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பயிற்சி கல்லூரிக்குச் செல்கிறார். அங்கு பயிற்சியில் உள்ள அதிகாரிகள், ராணுவ கல்விப்பிரிவு அதிகாரிகளுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துரையாடுகிறார். இன்று முதல் வரும் சனிக்கிழமை காலை வரை குடியரசுத் தலைவர் அங்கு தங்குகிறார்.
பின்னர், ஊட்டியில் இருந்து சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலமாக புறப்படுகிறார். அங்கிருந்து கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு வரும் குடியரசுத் தலைவர், தனி விமானம் மூலமாக திருச்சி செல்கிறார்.
திருச்சி, திருவாரூரில் என்ன திட்டம்?
திருச்சியில் இருந்து திருவாரூருக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்லும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். சனிக்கிழமை மதியம் 3.30 மணியளவில் நடக்கும் இந்த நிகழ்வில் அவர் பங்கேற்கிறார். பின்னர், அவர் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு திருச்சிக்கு வருகிறார்.
திருச்சி ஸ்ரீரங்கத்திற்கு நேரடியாக ஹெலிகாப்டர் மூலமாக வரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அங்கு சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்குச் செல்கிறார். சாமி தரிசனத்தை முடித்த பிறகு திருச்சி விமான நிலையத்திற்கு வரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மாலை 6.45 மணியளவில் மீண்டும் டெல்லிக்கு புறப்படுகிறார்.
மழையால் பயணம் ரத்தாகுமா?
குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு கடந்த சில நாட்களாவே ஊட்டி, திருச்சி மற்றும் திருவாரூரில் தீவிர பாதுகாப்ப முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஊட்டியில் ஹெலிகாப்டர் ஒத்திகை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வங்கக்கடைலில் புயல் உருவாக உள்ள நிலையில், டெல்டாவில் மழை கொட்டித் தீர்த்து வரும் சூழலில் குடியரசுத் தலைவரின் பயண திட்டத்தை மழை பாதிக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.