Pongal Parisu Thogai 2024: மக்களே ரெடியா..! ரேஷன் கடைகளில் இன்று முதல் பொங்கல் பரிசுக்கான டோக்கன் விநியோகம்
Pongal Parisu Thogai 2024: தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான டோக்கன் விநியோகிக்கும் பணிகள் இன்று தொடங்குகிறது.
Pongal Parisu Thogai 2024: டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாள், நேரத்தில் ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் பரிசுத்தொகுப்பு:
தைத்திருநாளான பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுவதை ஒட்டி, பொங்கல் பண்டிகைக்காக ஆண்டுதோறும் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம்.கடந்த சில ஆண்டுகளாக அரசு சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரொக்கமும் வழங்கப்படுகிறது. அதே போல் இந்த ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதற்கான டோக்கன்கள் இன்று முதல் நியாய விலை கடைகளில் விநியோகிக்கப்படுகிறது. பயனாளர்கள் டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாள், நேரத்தில் ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படுகிறது.
பணம் எப்போது கிடைக்கும?
டோக்கன் பெற்றவர்கள் வரும் 10 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகையை பெற்றுக்கொள்ளலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முன்னரே மக்களுக்கு இந்த பரிசுத் தொகுப்பு வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் வரும் 10 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக வழக்கமான விடுமுறை நாளான வரும் 12ம் தேதியும், ரேஷன் கடை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய நாளிலும் பயனாளர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்.
பயனாளர்களுக்கு கட்டுப்பாடுகள்:
நிதிநிலையை கருத்தில் கொண்டு நடப்பாண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதில் அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் அரிசி அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும், வரி செலுத்துபவர்கள், பொது துறையில் பணியாற்றுவோர், மத்திய மாநில அரசு ஊழியார்களாக இருந்தால் அவர்களுக்கு ரொக்கப்பணம் வழங்கப்படாது. கடந்த மாதம் மிக்ஜாம் புயல் பாதிப்பு மற்றும் தென் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்பு காரணமாக ரூ.6000 நிவாரணம் வழங்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.