Pongal Gift Pack 2025 : “ரேஷன் கார்டுகளுக்கு ஆயிரம் ரூபாய்” சிறப்பு பொங்கல் தொகுப்புகள் – எப்போது கிடைக்கும்?
பல்வேறு பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்புகள் 199, 499, 999 என்ற மூன்று விலைகளில் ஜனவரி மாதம் முதல் ரேஷன் கடைகளில் கிடைக்கவுள்ளது
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையை தமிழ்நாடு அரசு கொடுத்து வரும் நிலையில், அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் வரும் ஜனவரி மாதம் ஆயிரம் ரூபாயை வழங்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
பொங்கல் பரிசுத் தொகுப்போடு ஆயிரம் ரூபாய் – வரும் அறிவிப்பு
வரும் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் விழா கொண்டாடப்படவுள்ள நிலையில், கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியது போல, இந்த ஆண்டும் தர முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழு கரும்போடு, ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும் பொதுமக்களுக்கு அளிக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்காக இந்த ஆண்டு எவ்வளவு தொகை செலவிடவேண்டும் என்பது குறித்து தலைமைச் செயலாளர் தலைமையில் நிதித் துறை செயலாளர் உதயசந்திரன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தியுள்ள நிலையில், இதற்கான அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்று கூறப்படுகிறது.
‘இனிப்பு பொங்கல் – சிறப்பு பொங்கல் – பெரும் பொங்கல் : தொகுப்புகள் அறிமுகம்’
அதே நேரத்தில், நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மளிகை பொருட்களை வழங்கும் விதமாக 3 வகையான தொகுப்பு திட்டங்களை கூட்டுறவுத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
- அதன்படி, ‘இனிப்பு பொங்கல்’ தொகுப்பு 199 ரூபாய்க்கு கிடைக்கும். அதில், அரை கிலோ பச்சரிசி, பாகு வெல்லம், 5 கிராம் ஏலக்காய், தலா 50 கிராம்களில் முந்திரி, திராட்சை, ஆவின் நெய், 100 கிராம் பாசிப் பருப்பு ஆகியவை ஒரு துணைப் பையில் போட்டுத் தரப்படும்
- ’சிறப்பு பொங்கல்’ தொகுப்பு 499 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. அதில், அரை லிட்டர் செக்கு எண்ணெய், 20 மளிகை பொருட்கள் ஒரு துணிப் பையில் வைத்து தரப்படும்.
- அதே மாதிரி, ‘பெரும் பொங்கல் தொகுப்பு’ 999 ரூபாய்க்கு ரேஷன் கடைகள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். அதில், பொங்கலுக்கு தேவையான பொருட்கள் உள்பட 35 வகையான பொருட்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த பொருட்கள் மாநிலம் முழுவதும் வரும் ஜனவரி மாதம் முதல் ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளது. சென்னை காஞ்சிபுரத்தில் இந்த தொகுப்புகள் தலா 10 ஆயிரம் என்ற வகையிலும் மற்ற மாவட்டங்களில் ஆயிரம் முதல் 5 ஆயிரம் என்ற அளவிலும் விற்பனை செய்ய கூட்டுறவுத் துறை திட்டமிட்டுள்ளது.