Pongal 2024: களைக்கட்டும் பொங்கல்: கோயம்பேட்டில் பொருட்களை வாங்க குவியும் பொது மக்கள்..
பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பொங்கல் பொருட்களுக்கான சந்தை போடப்பட்டுள்ளது.
தைத்திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை, 16 ஆம் தேதி மாட்டுப் பொங்கல், 17 ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் போது மக்கள் தங்கள் வீடுகளில் குடும்பத்தினருடன் இணைந்து பொங்கல் செய்து கொண்டாடுவார்கள். விவசாயிகள் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும். பலரும் சொந்த ஊருக்கு சென்று கொண்டாடுவார்கள்.
முக்கியமாக பொங்கல் பண்டிகையின் போது வீட்டு வாசலில் அல்லது மாடியில் மண் அடுப்பில் விறகு எரித்து மண் பானையில் பொங்கல் செய்வார்கள். பொங்கலுக்கான முக்கிய பொருட்களாக கரும்பு, இஞ்சி, மஞ்சள் கருதப்படுகிறது. பொங்கல் பானையில் மஞ்சள் கொத்து கட்டி சூரியனுக்கு படைத்து வழிப்படுவார்கள்.
இந்நிலையில், பொங்கல் பண்டிக்கைக்கான பொருட்கள் கோயம்பேட்டில் வரத்தொடங்கியுள்ளது. இதற்கான சிறப்பு சந்தைகளும் போடப்பட்டுள்ளது. அந்த வகையில், 15 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.300 முதல் ரூ.500 விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ரூ.500 முதல் ரூ.700 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் கரும்பு கட்டின் விலை இன்று கணிசமாக குறைந்துள்ளது. அதாவது ரூ. 100 முதல் ரூ.200 ஆக குறைந்துள்ளது.
அதேபோல், மஞ்சள் கொத்து ரூ. 80 முதல் ரூ. 100 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இஞ்சி கொத்து ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. சேலம், மதுரை, புதுவை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து கரும்பு வரத்து அதிகரித்துள்ளது. மேலும், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மஞ்சள் வரத்து அதிகரித்துள்ளது. கோயம்பேடு மார்கெட்டில் 100 க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் பொங்கல் பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
பொருட்கள் கோயம்பேடுக்கு வந்துள்ள நிலையில், மார்க்கெட் களைக்கட்டியுள்ளது. ஏராளமான மக்கள் தற்போது முதல் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர். பொங்கல் பண்டிகை ஒட்டி பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில், பொருட்களின் விலை இன்னும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட பொது மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர். இந்த பொங்கல் பண்டிகைக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. ஜனவரி 12ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து 11,006 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகை முடிந்து பிற ஊர்களில் இருந்து சொந்து ஊர்களுக்கு மக்கள் செல்வதற்காக ஜனவரி 16 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை 17,581 சிறப்பு பேருந்கள் இயக்கப்படுகிறது.
இதன் மூலம் நேற்று மட்டும் சுமார் 2.17 லட்சம் மக்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர். அதாவது 3 ஆயிரத்து 946 பேருந்துகளில் நள்ளிரவு 12 மணிவரை இரண்டு லட்சத்து 17 ஆயிரத்து 30 பேர் பயணம் செய்துள்ளனர். இதுவரை ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 310 பேர் சொந்த ஊர்களுக்குச் செல்ல முன்பதிவு செய்துள்ளனர். மக்கள் சொந்த ஊருக்குச் செல்ல வரும் 14ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.