Pongal Wishes: 'உழவர் பெருமக்கள் தெய்வப் பண்புள்ளவர்கள்' - பொங்கல் வாழ்த்து கூறிய எடப்பாடி பழனிசாமி..
அல்லும் பகலும் அயராது பாட்டுபட்டு வரும் உழவர் பெருமக்கள் தெய்வப் பண்புள்ளவர்கள் என கூறி பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
வரும் 15 ஆம் தேதி தைத்திருநாளான பொங்கல் திருவிழா கொண்டாடப்பட உள்ளது. 15 ஆம் தேதி பொங்கல் திருநாள், 16 ஆம் தேதி மாட்டு பொங்கல், 17 ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் போது மக்கள் தங்கள் வீடுகளில் குடும்பத்தினருடன் இணைந்து பொங்கல் செய்து கொண்டாடுவார்கள். விவசாயிகள் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும். பலரும் சொந்த ஊருக்கு சென்று கொண்டாடுவார்கள்.
முக்கியமாக பொங்கல் பண்டிகையின் போது வீட்டு வாசலில் அல்லது மாடியில் மண் அடுப்பில் விறகு எரித்து மண் பானையில் பொங்கல் செய்வார்கள். பொங்கலுக்கான முக்கிய பொருட்களாக கரும்பு, இஞ்சி, மஞ்சள் கருதப்படுகிறது. பொங்கல் பானையில் மஞ்சள் கொத்து கட்டி சூரியனுக்கு படைத்து வழிப்படுவார்கள்.
பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட இருக்கும் சூழலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், “ உலகமெங்கும் வாழுகின்ற தமிழர்கள் அனைவரும் அன்பு பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் தைத் திருநாளாம் பொங்கல் திருநாளில், எனதருமைத் தமிழ் மக்கள் அனைவருக்கும் உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்கள் அனைவரும் பொங்கல் திருநாளின் முதல் பண்டிகையாக, போகிப் பண்டிகை தொடங்கி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் (உழவர் திருநாள்) என நான்கு நாட்கள் விமரிசையாகக் கொண்டாடி மகிழ்வார்கள்.
உழவர் பெருமக்கள் இயற்கையின் அருளினாலும், கடின உழைப்பினாலும் விலைந்த நெற்கதிர், கரும்பு, வாழை, இஞ்சி, மஞ்சள் ஆகிய விளைபொருட்களை வைத்தும்; புதுப் பானையில் அரிசியிட்டு பொங்கல் வைத்தும், 'பொங்கலோ பொங்கல்' என்று மகிழ்ச்சிக் குரலிட்டு இறைவனுக்குப் படைத்து வழிபடுவதோடு, தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து பொங்கல் திருநாளைக் கொண்டாடுவார்கள்.
பிறருக்கு உணவு வழங்கி உண்ண நினைப்பது தெய்வப் பண்பாகும். அனைத்து மக்களுக்கும் உணவு கிடைத்திட அல்லும் பகலும் அயராது பாட்டுபட்டு வரும் உழவர் பெருமக்கள் தெய்வப் பண்புள்ளவர்கள் ஆவார்கள். அத்தகைய உழவர் பெருமக்கள் வாழ்வில் ஏற்றம் பெற்றிட வேண்டும் என்பதற்காக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதை பெருமையோடு நினைவுகூர விரும்புகிறேன்.
தை பிறந்தால் வழி பிறக்கும்; தடைகள் தகரும்: நிலைகள் உயகும்: நினைவுகள் நிஜமாகும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்து, தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் மக்கள் அனைவரும் உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும், என்றும் குறையாத அன்பையும் பெற்று வளமோடும், நலமோடும் இன்புற்று வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.